‘முத்தலாக்’ தடை மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது

புதுடெல்லி,

முஸ்லிம் கணவர் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது.

இதைத்தொடர்ந்து, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் ‘‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா’’வை தயாரித்தது.

ஆனால், முத்தலாக் நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில், உடனடியாக மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் ‘‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா’’ நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் மசோதாவை தாக்கல் செய்தார்.

முத்தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்வது ஜாமீனில் வர முடியாத குற்றமாக கருதப்பட்டு, அந்த பெண்ணின் கணவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. மேலும் இந்த மசோதாவின்படி, பேச்சு மூலமோ அல்லது எழுத்து மூலமோ அல்லது இ–மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் உள்ளிட்ட மின்னணு ஊடகம் மூலமோ உடனடியாக மூன்று முறை தலாக் கூறுவது சட்டவிரோதமானதும், செல்லாததும் ஆகும்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் (விவாகரத்து பெறும் பெண்) தனக்கும், தனது மைனர் குழந்தைக்கும் ஜீவனாம்சம் தொகை பெற மாஜிஸ்திரேட்டை அணுகவும், மைனர் குழந்தையை தனது பாதுகாப்பில் வைத்துக் கொள்ள மாஜிஸ்திரேட்டை நாடவும் இந்த மசோதா வகை செய்கிறது.

மசோதாவை தாக்கல் செய்து மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசுகையில் கூறியதாவது:–

வரலாற்றில் இன்றைய தினம் முக்கியமான நாள் ஆகும். முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இதுபற்றி இந்த சபை முடிவு செய்ய இருக்கிறது. நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் சட்டம் கொண்டு வரும் முழு அதிகாரமும் பாராளுமன்றத்துக்கு உள்ளது. முத்தலாக் சட்ட விரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிய பிறகும், முத்தலாக் நடைமுறை நீடித்தால் அதை பார்த்துக் கொண்டு பாராளுமன்றம் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

இந்த மசோதா எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலும், அவர்களுடைய கண்ணியத்தை பாதுகாக்கும் வகையிலும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

முன்னதாக அவர் மசோதாவை தாக்கல் செய்த போது பிஜூ ஜனதாதளம், அ.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அகில இந்திய மஜ்லிஸ் இதேஹதுல் முஸ்லிமின் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அ.தி.மு.க. உறுப்பினர் அன்வர் ராஜா பேசுகையில், இந்த சட்ட மசோதா அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு எதிரான எந்த மசோதாவையும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது என்றும் கூறினார். மேலும் மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும், மசோதாவை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மசோதாவில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்தனர். ஆனால் அந்த திருத்தங்கள் குரல் ஓட்டு மூலம் நிராகரிக்கப்பட்டன.

அதன்பிறகு சபையில் மசோதா நிறைவேறியது.

-dailythanthi.com

TAGS: