மக்களவையில் அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் குறிப்பிட்ட குல்அஃப்ஷான் யார்?

முத்தலாக் விவாகரத்து முறை சட்ட விரோதமானது என்பதை உறுதிப்படுத்தும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் வியாழக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டு, கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.

வரைவு மசோதாவில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், குரல் வாக்கெடுப்புமூலம் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இனி மாநிலங்களவையில் மசோதா முன்வைக்கப்பட்டு அங்கு நிறைவேற்றப்பட்ட பிறகு சட்டமாக அமல்படுத்தப்படும்.

முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு 2017 ஆகஸ்ட் 22 அன்று தீர்ப்பளித்தது.

முத்தலாக் விவகாரம் பெண்களின் கண்ணியத்துடன் தொடர்புடையது என்று மசோதாவை தாக்கல் செய்த சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்தார்.

அப்போது அவர் ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டுச் சொன்னார்.

யார் அந்தப் பெண்?

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் வசிக்கும் ஒரு சாதாரண பெண் குல்அஃப்ஷானின் பெயர் நாடாளுமன்றத்தில் உதாரணமாக காட்டப்பட்டதற்கு காரணம் முத்தலாக் நடைமுறையால் அண்மையில் பாதிக்கப்பட்ட பெண் அவர் என்பதே காரணம்.

முஸ்லிம் கணவர் ஒருவர் எப்படிப்பட்ட அற்ப காரணங்களுக்காக தலாக் சொல்லி மனைவியை சுலபமாக வாழ்க்கையில் இருந்து விலக்கிவிட முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு குல்அஃப்ஷா.

ராம்பூர் மாவட்டம் சதரில் உள்ள ஆகில் என்ற கிராமத்தில் வசிக்கிறார் குல்அஃப்ஷான்.

ஒரே பகுதியில் வசிக்கும் குல்அஃப்ஷானின் காசிமும் காதலித்தார்கள். இரு குடும்பங்களும் ஏற்கனவே அறிமுகமானவை.

காதலர்களின் விருப்பத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்ட குடும்பத்தினர் ஏழு மாதங்களுக்கு முன்புதான் காதலர்களின் திருமணத்தை நடத்தி முடித்தனர்.

குல்அஃப்ஷானின் கணவர் காசிம் வாகன ஓட்டியாக வேலை பார்க்கிறார்.

ஏழே மாதங்களில் காதல் கசந்துவிட்டதா?

“தூங்கிக் கொண்டிருந்த நான் காலை எட்டரை மணி சுமாருக்கு எழுந்து அறையில் இருந்து வெளியே வந்ததுமே, கணவர் என்னைப்பார்த்து மூன்று முறை தலாக் சொன்னார்.”

“என்ன நடக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளும் முன்னரே என் கணவர் தலாக்-தலாக்-தலாக் என்று மூன்று முறை சொல்லி முடித்துவிட்டார்” என்று சொல்லி வருந்துகிறார் குல்அஃப்ஷான்.

“அவருக்கு புரிய வைக்க நான் மிகவும் முயற்சி செய்தேன். ஆனால், நான் சொன்ன எதையுமே கேட்க தயாராக இல்லை. இனிமேல் என்னுடன் வாழப்போவதில்லை என்று உறுதியாக சொல்லிவிட்டார்.”

திருமணத்திற்கு முன்பும் காசிம் அவசரக்காரர், சட்டென்று எதையும் யோசிக்காமல் பேசக்கூடியவர் என்று சொல்கிறார் குல்அஃப்ஷான். காதலிக்கும் சமயத்தில் “போன் செய்து உடனே வீட்டிற்கு வெளியே வா, இல்லையென்றால் விஷம் குடித்துவிடுவேன் என்று சொல்வார், நானும் பயந்துபோய் வெளியே வருவேன்”.

காசிம் தலாக் சொல்லும்போது குடும்பத்தினர் மூன்று பேர் அங்கு இருந்தார்கள், ஆனால் யாரும் ஒன்றுமே சொல்லவில்லை என்கிறார் குல்அஃப்ஷான்.

காவல்நிலையத்தில் வாய்மொழியாக புகார் அளித்திருப்பதாகவும் குல்அஃப்ஷான் கூறுகிறார்.

இந்த விவகாரத்தை குல்அஃப்ஷானின் குடும்பத்தினர் பஞ்சாயத்துக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். பஞ்சாயத்தினரும் தம்பதிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்திருக்கின்றனர்.

“பஞ்சாயத்து எங்களை சமாதனம் செய்துவைத்துவிட்டது. ஆனால் நாங்கள் ஷரியாவை பின்பற்றுபவர்கள். எனவே இனிமேல் என் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டுமானால் ‘நிகாஹ் ஹலாலா’ செய்யவேண்டும்” என்று கவலைப்படுகிறார்.

விவாகரத்து செய்து கொண்ட தம்பதிகள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவேண்டுமானால், மனைவி வேறொரு ஆணை திருமணம் செய்துக் கொண்டு, அவரிடம் இருந்து விவாகரத்து பெறவேண்டும். அதன்பிறகு, முதல் கணவரை மீண்டும் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பதே ‘நிகாஹ் ஹலாலா’.

“பஞ்சாயத்தை சேர்ந்த ஒருவர் தனது பெயரை குறிப்பிடாமல் இந்த விவகாரம் பற்றி பேசினார். “இருவரின் குடும்பத்தையும் அழைத்துப் பேசினோம். பிறகு தம்பதிகளிடையே சமாதானம் ஏற்பட்டது” என்கிறார் அவர்.

குல்அஃப்ஷானின் கணவர் காசிமிடம் பேசுவதற்கு முயற்சி செய்தோம். அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றபோதிலும் அவருடைய சகோதரர் மிராஜிடம் தொலைபேசியில் பேச முடிந்தது.

அவர் கூறுகிறார், “காசிம் மனைவிக்கு தலாக் சொல்லி விவாகரத்து கொடுத்துவிட்டான். பஞ்சாயத்தினர் அவர்கள் இருவரிடமும் பேசி சமாதானப்படுத்திவிட்டார்கள். இனிமேல் எங்கள் சட்டப்படி நிகாஹ் ஹாலாலாவுக்குப் பிறகு இருவரும் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள்”.

மசோதாவை தாக்கல் செய்த ரவிஷங்கர் பிரசாதின் கோரிக்கைகள்

•முத்தலாக் விவகாரத்தில் அவை அமைதியாக இருக்க வேண்டுமா?

•நான் ஷரியாவில் தலையிட விரும்பவில்லை.

•இந்த மசோதா முத்தலாக் பற்றியது மட்டுமே. இந்த சட்ட மசோதாவை அரசியல் கோணத்தில் இருந்து பார்க்கவேண்டாம் என்று நாட்டின் மிகப்பெரிய பஞ்சாயத்தான மக்களவையிடம் கேட்டுக்கொள்கிறேன்.

•கட்சிகள் என்ற வரையறையில் இருந்து இந்த மசோதாவை பார்க்கவேண்டாம்.

•மதத்தை அளவுகோலாக கொண்டு முத்தலாக் மசோதாவை அளவிடவேண்டாம்.

•இந்த மசோதாவை வாக்கு வங்கியாக பார்க்கவேண்டாம். நமது சகோதரிகள், மகள்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தை காப்பதற்காக இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.

-BBC_Tamil

TAGS: