2017 சீமானுக்கு எப்படி இருந்தது? ஒரு சிறப்பு நேர்காணல்..

நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு செயல்பாடும் அரசியல் தளத்தில் புதிய விவாதத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரு சதவீத வாக்குகளை வாங்கினாலும், அடுத்து வந்த நாள்களில் புதிய உற்சாகத்தோடு களப்பணியில் இறங்கினார்கள் நாம் தமிழர் தொண்டர்கள். அதன் விளைவாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 3,800 வாக்குகளைப் பெற்று பிரதான கட்சிகளை அதிர வைத்தனர். இப்போது அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சீமானிடம் பேசினோம்.

2017-ல் உங்களுக்கு மிகவும் சந்தோஷமளித்த ஒரு விஷயம்?

” தாமிரபரணி ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க நானும் நல்லக்கண்ணு அய்யாவும் அந்த ஆற்றுக்குள்ளேயே உட்கார்ந்து போராட்டம் நடத்தினோம். மணல் கொள்ளைக்குத் தடைவிதித்துப் பேசிய நீதியரசர், ‘ அவர்கள் இருவரும் இறங்கிப் போராடுவதைக் கவனித்தீர்களா?’ எனக் குறிப்பிட்டார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நானும் அமீரும் ராமேஸ்வரத்தில் பேசியதற்காக தேசத்துரோக வழக்கைத் தொடுத்தார்கள். எட்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்தது. இந்த ஆண்டு எங்கள் இருவரையும் விடுதலை செய்தார் நீதியரசர் லிங்கேஸ்வரன். இது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பாக இருந்தது. அதேபோல், ஜல்லிக்கட்டுப் போராட்டமும் அதற்குக் கிடைத்த வெற்றியும் நெகிழவைத்தன”.

2017-ல் உங்களுக்கு மிகவும் வேதனையளித்த ஒரு விஷயம்?

” வேதனை ஒன்று இரண்டல்ல ஏராளமாக இருக்கின்றன. நெடுவாசல், கதிராமங்கலம் பகுதி மக்களின் போராட்டங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. தொடர்ச்சியாக மீனவ மக்களும் விவசாயப் பெருங்குடி மக்களும் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். தங்கை அனிதாவின் மரணம் மனதை பாதித்தது. ஒகி புயலால் கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அரசு திட்டமிட்டே இவர்களைப் படுகொலை செய்துவிட்டது. இருபது நாள் கழித்து 27 பேரைக் கொண்டு வர முடிகிறது என்றால், புயல் ஓய்ந்து ஓரிரு நாளில் சென்றிருந்தால் ஏராளமான மீனவர்களைக் கரைக்குக் கொண்டு வந்திருக்க முடியும்”.

2017-ல் நீங்கள் அடிக்கடி கேட்ட வார்த்தை?

” நாடு முன்னேறுகிறது; வளர்கிறது, ‘ஆன்ட்டி இந்தியன்ஸ்’, ‘தேசத்துரோகி’ ஆகிய வார்த்தைகள்தாம். அதைவிட முக்கியமான வார்த்தை, ‘தாமரை மலர்ந்தே தீரும்’. அது எங்கே மலரப் போகிறது…படர்தாமரைதான் வரும். குடிப்பதற்குக்கூட குளத்தில் தண்ணீர் இல்லை. தாமரை எப்படி மலரும்?”.

2017-ல் உங்களுக்குப் பிடித்த ஒருவர்?

” அய்யா நல்லக்கண்ணு, சகாயம் ஆகியோர்”.

எரிச்சலூட்டிய ஒருவர்?

” நிறைய பேர் இருக்கிறார்கள். தவறுகளைச் செய்த ஒவ்வொருவரும் எரிச்சலூட்டுபவர்கள்தான். ஓட்டுக்குக் காசு கொடுப்பவர்கள், அதை வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுபவர்கள்”.

இந்த வருடம் உங்களைப் பற்றிய கிண்டலில் நீங்களே ரசித்தது எது?

” முருகன் முப்பாட்டன் எனப் பதிவிட்டு கிண்டல் செய்ததுதான். முருகன் கையில் இருக்கும் வேலைவிட, என் கையில்தான் அதிகமான வேல் இருந்தது. அந்தளவுக்கு மீம்ஸ் போட்டுவிட்டார்கள்”.

இந்த வருடம் படித்த புத்தகம்?

” ராபின் சர்மா புத்தகங்கள் அனைத்தும் பிடிக்கும். பிரிட்டிஷ் உளவாளியின் வாக்குமூலம் புத்தகத்தைப் படித்து மிரண்டு போனேன். ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய பொருளாதார அடியாளின் வாக்குமூலம் போல, இந்த புத்தகத்தில் ஏராளமான தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன”.

சென்ற பயணம்?

” தினம்தினம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டுக்குள்தான் அனைத்துப் பயணங்களும்”.

பார்த்த சினிமா?

“அறம் படம் பார்த்தேன். ரொம்பப் பிடித்திருந்தது”.

சந்தித்த நபர்?

“சகாயம் அய்யாவை இரண்டு முறை சந்தித்துப் பேசினேன். அந்தச் சந்திப்பைச் சொல்லலாம்”.

2017-ஐப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்…?

” ஓர் ஆண்டு போயிருக்கிறது அவ்வளவுதான். மாற்றமோ முன்னேற்றமோ எதுவும் இல்லை. சொல்லும்படியாகச் சிறப்பாக எதுவும் இல்லை. ‘பணமதிப்பிழப்பு, வரிவிதிப்பு ஆகியவை தேசத்தையே பின்னோக்கித் தள்ளிவிடும்’ என்று சொன்னோம். யாருமே அதைப் புரிந்து கொள்ளவில்லை. இப்போது 238 பொருள்களுக்கு வரியைக் குறைத்திருக்கிறார்கள். அப்படியானால் அவர்களுக்கே பாதிப்பு தெரிகிறது. கறுப்புப் பணத்தை ஒழிப்போம் என்றார்கள். சந்துக்குச் சந்து ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் தாளைக் கொடுக்கிறார்கள். ஓட்டுக்குப் பத்தாயிரம் கொடுக்க முடிகிறது என்றால், கறுப்புப் பணம் ஒழியவில்லை என்றுதானே அர்த்தம்”.

2018-க்கு உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளும் மந்திரம் என்ன?

” இங்கர்சால் சொன்னதுதான், ‘ வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது, சாகலாம் எனத் தோன்றினால் புதிதாக ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டு’ என்பார். வெற்றிக்கு அடிப்படை கடின உழைப்புதான். தன்னம்பிக்கை, பொறுமை, விடாமுயற்சி ஆகியவை மிக அவசியம். ஆனால், சாதிப்பதற்குக் கனவு அவசியம். அதுபோன்ற கனவை முன்வைத்து நகர்கிறோம். அதுதான் எங்களை இயக்குகிறது. எங்களை எப்போதும் புதிதாக, உற்சாகமாக வைத்திருக்கிறது. 2016-ல் தோற்றோம். எந்தவிதத் தளர்ச்சியும் இல்லாமல் 2017-ல் பாய்ந்தோம். மீண்டும் வெற்றியை நோக்கி நடைபோடுகிறோம். தோற்று எழுகிறவனுக்குத்தான் வெற்றியின் சுவை தெரியும். தோல்வி என்பது வெற்றிக்கு மிக அருகில் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். 2018-ல் கூடுதல் வேகத்தோடு ஓடுவோம்”.

-athirvu.com

TAGS: