‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் செயல்பாடு அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் அதிக அளவில் உள்ள இவற்றின் செயல்பாடு தற்போது இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தும் பணி தொடங்கி விட்டது.
தற்போது உலகிலேயே முதன் முறையாக தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ‘ரோபோ’ போலீஸ் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. அங்கு வழிப்பறி, கொலை, கொள்ளை விபத்து போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது.
அவற்றை கண்காணித்து புகார்களை பதிவு செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ‘ரோபோ’ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இவை 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்டது. கேமராக்கள் மற்றும் சென்சார் எனப்படும் உணர்வு கருவி ‘ஜி.பி.எஸ்.’வுடன் பொருத்தப்பட்டுள்ளன.
ஐதராபாத்தில் உள்ள ‘எச்.பாட்ஸ்’ ரோபோடிக் என்ற நிறுவனம் தாய்லாந்தின் ‘அமிகோ’ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளது. இந்த ‘ரோபோ’வால் பல இடங்களுக்கு நகர்ந்து செல்ல முடியும்.
இது பொதுமக்கள் அளிக்கும் புகார்களை பெற்றுக் கொண்டு பதிவு செய்யும். அவர்களிடம் விசாரணை நடத்தும், பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்.
இவை தவிர அவசர புகார்களை ‘ரோபோ’ போலீஸ் மூலம் வீடியோ, ஆடியோ மற்றும் போட் டோக்கள் மூலம் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க முடியும். அதற்கான தொழில் நுட்பம் மற்றும் செயலிகள் இதில் பொருத்தப்பட் டுள்ளன.
இந்த ரோபோக்கள் ஆய்வகத்தில் வைக்கப்பட்டு அதன் செயல்பாடுகளை 16 பேர் கொண்ட குழுவினரால் 6 மாதங்கள் கண்காணிக்கப்பட்டன.
ரோந்து பணிக்கு மட்டு மின்றி, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டுகளையும் கண்டுபிடிக்க பயன்படுத்தலாம். அதற்கான செயலியும் இதில் உள்ளது. மேலும் சந்தேக நபரும் இதன் பார்வையில் இருந்து தப்ப முடியாது.
தெருக்களில் ரோந்து பணியில் இருக்கும் ரோபோவுக்கு விபத்து குறித்து தெரியவந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு இது தகவல் தரும். உடனே போலீசார் அங்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்.
போலீஸ் ரோபோ குறித்து ‘எச்-பாட்ஸ்’ நிறுவன உரிமையாளரும், இவற்றை தயாரிக்க மூளையாக செயல்பட்டவருமான ஆர்யா மற்றும் பி.எஸ்.வி. கிஷான் ஆகியோர் கூறியதாவது:-
இந்த ரோபோக்கள் மூலம் போலீஸ் பணியில் ஈடுபடுபவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மனிதர்களுக்கு பதிலாக இவை உருவாக்கப்படவில்லை. கூடுதல் பணிக்காகவே இது தயாரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் இதை ஈடுபடுத்த முடியும். போலீஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் முக்கியமான இடங்களிலும் இவற்றை பயன்படுத்த முடியும். இத்தகைய ரோபோவை தயாரிக்க 9 ஆண்டுகளாக இரவு பகல் பணியாற்றினோம் என்றனர்.
போலீஸ் ரோபோ தயாரிக்க ‘எச்-பாட்ஸ்’ நிறுவனம் ரூ.45 லட்சம் முதலீடு செய்துள்ளது. இவற்றை தலா ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 38 போலீஸ் ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
நேற்று இந்த ‘ரோபோ’ அறிமுகம் செய்யப்பட்டது. வருகிற ஜூலை மாதம் ஐதராபாத் போலீசில் அது தனது பணியை தொடங்கும்.
-athirvu.com