நியூயார்க்: எச்-1பி விசா காலக்கெடு முடிந்தும் அமெரிக்காவில் பல வெளிநாட்டு பணியாளர்கள் தங்கி இருக்கிறார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த பணியாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக எச்-1பி விசா பெறுவதில் நிறைய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது. சில சில விதிமுறை மாற்றங்களும் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தற்போது எச்-1பி விசா காலக்கெடு முடிந்து அமெரிக்காவில் கிரீன் கார்ட் வாங்குவதற்காக காத்து இருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட இருக்கிறது.
எச்-1பி விசா
எச்-1பி விசா வைத்து இருப்பவர்களுக்கு வழக்கமான காலக்கெடுவைவிட 3 வருடம் அதிகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் 6 வருடம் அங்கு இருக்க முடியும். அமெரிக்காவில் இருக்கும் ‘திறன்வாய்ந்த’ பணியாளர் பற்றாக்குறையை போக்குவதற்காக இந்த காலக்கெடு நீட்டிப்பு ஒபாமா ஆட்சியில் இருந்த போது செய்யப்பட்டது.
குடியுரிமை
இப்படி காலகெடு நீட்டிப்பு செய்யப்படும் சமயங்களில் அங்கு எச்-1பி விசா வைத்து இருக்கும் இந்தியர்கள் கிரீன் கார்ட் கேட்டு விண்ணப்பம் செய்வது வழக்கம். இவர்களின் கிரீன் கார்ட் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு முடிவு தெரியும் வரை அவர்கள் அமெரிக்காவிலேயே தங்கி கொள்ளும் சட்டம் தற்போது நடைமுறையில் இருக்கிறது. சத்யா நாடெல்லா தொடங்கி சுந்தர் பிச்சை வரை இப்படித்தான் கிரீன் கார்ட் பெற்றார்கள்.
இனி கிடையாது
இனி இதுபோல் அமெரிக்காவில் தங்கி இருக்க முடியாது. அதன்படி ஒருவருடைய எச்-1பி விசா காலாவதியாகிவிட்டால் அவர் கண்டிப்பாக அமெரிக்காவை விட்டு செல்ல வேண்டும். கிரீன் கார்ட் விண்ணப்பம் நிலுவையில் இருந்தாலும் இதே கதிதான். இதனால் அங்கு இருக்கும் பல வெளிநாட்டு பணியாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
வேலை போக வாய்ப்பு
இந்த புதிய சட்டம் திருத்தம் காரணமாக 5 லட்சம் இந்திய பணியாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. இதில் பலருக்கு வேலை போகும் அபாயமும் இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. மேலும் தற்போது அங்கு எச்-1பி விசா காலக்கெடு முடிந்து இருக்கும் பணியாளர்கள் பலர் இன்னும் சில தினங்களில் ஊருக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.