தமிழரின் உயிர்வளி, தமிழ்வழிக் கல்வி! – அதன் கோடரிக்காம்பு இருமொழிக் கொள்கை

ஞாயிறு’ நக்கீரன், ஜனவரி 4, 2018.

தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கணித வாய்ப்பாட்டை தமிழில்தான்  சொல்லத் தெரியும், தமிழில்தான் புரியும். அதை ஆங்கிலத்திலே சொல்லும் போது அதை அவர்கள் மன்னம் செய்து ஒதுகின்றனர். கால் (1/4) வாய்ப்பாடு, அரை (1/2) வாய்ப்பாடு, முக்கால் (3/4) வாய்ப்பாடென்றால் என்னவென்று ஆசிரியர்களே கேட்கின்றனர். தசம பின்னமான 0.25 என்பதை ஐந்தால் பெருக்கி 1.25 என்று சொல்வதற்கு முன், நம் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு கால் வாய்ப்பாடு தெரிந்திருப்பவர்கள்  5X1/4= 1 1/4 ( ஐகால் ஒன்றே கால்) என்று நொடிப் பொழுதில் கூறிவிடுவர்.

மூன்றே முக்கால் என்றால் அதன் மதிப்பை சுலபமாக உணரந்து விடுவார்கள். அதை ‘திரி அண்டு திரி குவாட்டார்’ என்றால் என்ன புரியும்.  மேலும் எண்களின் மதிப்பை உணர அவை சார்ந்த அடிப்படை அறிவாற்றல் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆற்றல் குழந்தை பிறந்தது முதல் அது செவிமடுத்து உணரப்படுவதாகும். எவ்வளவு, எத்தனை, தூரம், எடை, உயரம், அளவு போன்றவற்றை ஒவ்வொரு நாளும் பயன் படுத்தும் போது குழந்தைகளுக்கு கணிதம் சார்ந்த ஆற்றல் உருவாக்கப்படுகிறது. அதை அடிப்படையாக் கொண்டுதான் ஆரம்பக்கல்வி இருக்க வேண்டும்.

இப்படி யெல்லாம் கணிதப் பாடத்தில் ஏராளமான கலைச் சொற்களை உணர்வு நிலையில் பெற்றுள்ள மாணவர்கள், அந்தப் பாடத்தை ஆங்கிலத்தில் படிக்க முற்பட்டால் அவர்களால் அறிவாற்றலுடன் செயல்படுவது தடைபடும்.

மேலும், அப்படி செய்யும் போது தமிழ்ப்பள்ளி மாணவர் என்ற அடையாளமே அற்றுவிடும். இப்படி தமிழ்மொழியின்பால் பற்றும் இன்றி, தங்களுக்கு தமிழ் உணர்வும் தெளிவும் இல்லாமல் தமிழ்ப்பள்ளியில் எங்கள் பிள்ளையை சேர்த்துவிட்டோம் என்று சொல்லிக் கொண்டு தங்கள் பிள்ளை கணிதப் பாடத்தையும் அறிவியலையும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்  என்று தமிழ்ப்பள்ளி என்னும் நாற்றங்காலில் வெந்நீரைப் பாய்ச்ச முயற்சிக்கும் பெற்றோரே, உங்களைப் போன்ற ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்வழிக் கல்வி- தமிழ்ப் பள்ளி என்ற கட்டமைப்பையே சீர்குலைக்க எத்தனிப்போர் போக்கு அக்கிரமும் அநியாயமும் கொண்டதாகும்.

அதைப் போலவே அறிவியல் பாடத்தையும் தமிழில் கற்காமல் தமிழ்ப்பள்ளி மாணவன் ஆங்கிலத்தில் கற்க வேண்டுமென்றால், அது கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம். உதாரணமாக தவாரங்கள் உணவு தயாரிக்க அதில் இருக்கும் பச்சையம் என்ற பச்சை நிறம் கொண்ட தாவர அணுக்கள் தேவைப்படுகிறது. இது ஆங்கிலத்தில் குளோரபில் – chlorophyll – எனப்படும். மேலும் ஒளியைச் சேர்த்து கரிவழியுடன் உணவு தயாரிப்பதை ஒளி சேர்க்கை என்கிறோம். இது ஆங்கிலத்தில் போட்டோசிந்திசிஸ் – photosynthesis எனப்படும். கரிவழிக்கு ஆங்கிலத்தில் carbondioxide ஆகும். தமிழ்க் குழந்தைகள் தங்களுக்கு புரிந்த மொழியான தமிழில்தான் சுலபமான வகையில் அறிவியலை புரிதலுடன் கற்க இயலும்.

எனவே, தமிழ்வழிக் கல்வி என்பது, தமிழருக்கு மூச்சுக் காற்றைப் போன்றது. அப்படிப்பட்ட தமிழ்க் கல்வி குடிகொண்டுள்ள தமிழ்ப்பள்ளியில் பெரும்பான்மையான பாடங்கள் ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பவர்கள், அடக்கமாக வேற்றுப் பள்ளிகளை நாடுவதுதான் முறை; அதை விடுத்து தமிழ்ப்பள்ளியில் ஆங்கிலக் கல்வி வேண்டும் என்போர் கரையான் அரும்பாடுபட்டு கட்டிய புற்றில் குடிபுக முயலும் கருநாகத்தைப் போன்றவர் ஆவர்.

கடந்த 200 ஆண்டுகளாக இந்த மலையக மண்ணில் தொய்வின்றி தமிழ்வழிக் கல்வி தொடர்கின்றதென்றால், இதன்பொருட்டு எண்ணிறந்த சான்றோர் பெருமக்கள் அரும்பாடாற்றியது உள்ளதுதான் அதற்குக் காரணம். அதேவேளை, தெளிந்த நிரோடையில் மெல்ல சலசலத்து ஓடும் அருவியைப் போல, தமிழ்வழிக் கல்வி தங்குதடை இங்கு தொடரவில்லை.

பலவித இடரையும் இன்னலையும் காலமெல்லாம் எதிர்கொண்டபடியே சமாளித்து வரும் தமிழ்வழிக் கல்வி, இந்த மலேசியாவில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளது என்றால், அதன்பொருட்டு அந்தந்தக் காலத்தே வாழ்ந்த –  வாழும் நற்றமிழர்கள் கைம்மாறு கருதாமல் கடப்பாட்டு உணர்வுடன் ஆற்றிய – ஆற்றும் பணிதான் தலையாயது.

ஆயினும், தமிழர்தம் உயிரணைய  கருவியான தமிழ்மொழியைப் போல இப்படி காலமெல்லாம் இன்னலையும் இடரையும் எதிர்கொள்ளும்மொழி வேறு இருக்குமா என்றால், உலக அளவில் இல்லையென்றே சொல்லலாம்.

உடன் பங்காளி கொலையாளி என்பதைப் போல, தமிழ் மொழியின் மூலம் செழித்தோரும் கிளைத்தோருமே தமிழுக்கு காலமெல்லாம் அடியறுக்கும் வேலையைச் செய்கின்றனர். எது எவ்வாறாயினும், தமிழ்ப்பள்ளியில் இருமொழி பாடத் திட்டம் கூடவேக் கூடாது. அது, தமிழ்வழிக் கல்வியின் நாளைய இருப்புக்கு இன்றைய ஆபத்தைப் போன்றது. நல்லோரே, நாட்டோரே சிந்திப்பீர் நடுநிலையுடன்..!