தங்கம் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பெரும்பாலான முடிவுகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் வீட்டு தேவைக்காக கட்டாயத்தின் பேரில் வாங்கப்படும் தங்கம் மற்றும் நகைகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. தங்கம் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்வதில் மட்டும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்திருக்கிறது.

தங்கத்தின் மீது 10 சதவீதம் சுங்க வரியும், ஒரு சதவீதம் உற்பத்தி வரியும் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தங்கத்தின் மீதான சேதாரம், செய்கூலி ஆகியவற்றை உள்ளடக்கிய மதிப்பு கூட்டு சேவை கட்டணம் மீது 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

ரத்து செய்யவேண்டும்

தங்கம் ஆடம்பரமான பொருள் என்று கூறி கூடுதல் வரியை நியாயப்படுத்த முடியாது. இந்திய கலாசாரத்தில் தங்கம் திருமணத்தில் கட்டாயமான ஒன்றாகிவிட்டது. ஏழை குடும்ப திருமணமாக இருந்தாலும் கூட, குறைந்தது 10 முதல் 15 பவுன் வரதட்சணையாக வழங்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மேலும், இந்திய மக்கள் தொகையில் 5 சதவீதத்துக்கும் குறைவானவர்களால் பயன்படுத்தப்படும் வைரம் உள்ளிட்ட கற்களின் மீதான வரியை குறைத்துள்ள மத்திய அரசு 95 சதவீதத்தினரால் பயன்படுத்தப்படும் தங்கத்தின் மீதான வரியை குறைக்க அரசு மறுப்பதை நியாயப்படுத்த முடியாது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.912 உயர்ந்துள்ளது. வரி, சேதாரம், விலை உயர்வு என்ற பெயரில் ஒரு பவுன் தங்கத்துக்கு ரூ.7 ஆயிரம் வரை பறிக்கப்படுவது தான் தங்கத்தை ஏழைகளிடமிருந்து விலக்கி வைத்திருக்கிறது. இந்தநிலையை மாற்ற தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, பொருட்கள் மற்றும் சேவை வரி ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்வதுடன், சேதாரத்தையும் கட்டுப்படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-dailythanthi.com

TAGS: