கேரள மாநிலம் திருச்சூர் ரெயில் நிலைய 3-வது பிளாட்பாரத்தில் கடந்த 1998-ம் ஆண்டு 3 வயது சிறுமி அனாதையாக விடப்பட்டார். சிறுமி பசியால் மயங்கி கிடந்தாள். அப்போது திருச்சூர் சாலக்குடியில் உள்ள ஆசா தீப கிறிஸ்வத கன்னியாஸ்திரிகள் அங்கு வந்தனர்.
சிறுமியை பார்த்த அவர்கள் அவளை மீட்டு விசாரணை நடத்தினர். சிறுமி சரியாக கூட பேசமுடியாத நிலையில் இருந்தாள். சிறுமியை அரவணைத்த கன்னியாஸ்திரிகள் அவளுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து ஆறுதல் கூறினர். அப்போது சிறுமியின் அருகே ஒருவர் வந்தார். கன்னியாஸ்திரிகளிடம் இவள் எனது மகள் கீதா. தமிழகத்தில் இருந்து திருச்சூருக்கு வேலை தேடி வந்தேன். இங்கு தங்குவதற்கு இடம் இல்லாததால் மகளை ரெயில் நிலையத்தில் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டேன் என்றார். சிறுமியும் தந்தை அருகே சென்றாள்.
நிலைமையை உணர்ந்த கன்னியாஸ்திரிகள் தங்குவதற்கு இடம் கிடைக்கும் வரை கீதா எங்கள் பராமரிப்பில் இருக்கட்டும் என்று கேட்டனர். இதற்கு சிறுமியின் தந்தை சம்மதித்தார். அதன்படி சிறுமியை ஆசாதீப மடத்திற்கு அழைத்துச்சென்றனர். அடுத்து நாள் தந்தை மடத்திற்கு வந்து மகளை பார்த்தார். அதன்பின்னர் இன்று வரை அவர் வரவில்லை.
இந்நிலையில் நிர்வாகம் கீதாவை நன்கு படிக்க வைக்க முடிவு எடுத்தது. சிறுமிக்கு கல்வி பயிற்றுவிக்க மேரி என்ற ஆசிரியையை நியமித்தனர். நன்றாக படித்த கீதா விளையாட்டிலும் ஆர்வம் காட்டினார். கூடை பந்து விளையாட்டிலும் ஆர்வம் காட்டினார். இதனை அறிந்த நிர்வாகம் சிறுமிக்கு கூடை பந்து பயிற்சியாளரையும் நியமித்தனர். கீதா படிப்பு, விளையாட்டு என்று இரு துறைகளிலும் தேர்ச்சி பெற்றார். கேரள மற்றும் இந்தியாவுக்காக கூடை பந்து விளையாட்டில் பதக்கங்கள் குவித்தார்.
அதன்பின்னர் கோழிக்கோட்டில் உள்ள கல்லூரியில் வரலாற்றை முதன்மை பாடமாக தேர்வு செய்த கீதா அதில் முதல்வகுப்பில் தேர்வானார். மலையாளம், ஆங்கிலம் என்று இருமொழிகளையும் நன்கு கற்றார்.
விளையாட்டு மற்றும் பட்டப்படிப்பு தகுதியுடன் ரெயில்வே தேர்வு எழுதினார். தேர்வில் வெற்றி பெற்ற கீதா கவுகாத்தியில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். நேற்று முன்தினம் மடத்திற்கு திரும்பினார். அங்குள்ளவர்கள் கீதாவை பாராட்டினர்.
கீதாவுக்கு தற்போது வயது 22 வயது. நேற்று தான் அனாதையாக விடப்பட்ட அதே 3-வது பிளாட்பாரத்திற்கு ரெயில்வே அதிகாரியாக கம்பீரமாக நடந்து வந்தார். பசியுடன் மயங்கி கிடந்த அந்த இடத்தை பார்த்ததும் கண்கலங்கிய கீதாவுக்கு பெற்றோர் நினைவு வந்தது.
அப்போது நிருபர்கள் கீதாவை சூழ்ந்து கொண்டனர். நிருபர்களிடம் கீதா கூறியதாவது:-
எனது சொந்த ஊர் தமிழ்நாடு. எனது தந்தை தாத்தாவுடன் ஏற்பட்ட தகராறில் என்னை மட்டும் அழைத்துக்கொண்டு திருச்சூர் வந்தார். 2-வது நாளில் இருந்து அவர் மாயமாகி விட்டார். எனது தாய்- தந்தை முகம் நன்கு நினைவில் உள்ளது. தமிழகத்தில் எங்கு உள்ளனர் என்று தான் தெரியவில்லை. ஆனால் நான் நிச்சயம் கண்டுபிடித்து விடுவேன்.
வரும் 22-ந்தேதி திருவண்ணாமலையை சேர்ந்த கூடைப்பந்து வீரர் ஜெயகுமார் என்பவரை திருமணம் செய்ய ஊருக்கு செல்கிறேன். என்னை வாழ வைத்து கேரள மண்ணுக்கு எனது நன்றி என்று கூறினார்.
-athirvu.com