ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம்..

டெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இரட்டை பதவி விவகாரத்தில் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் பரிந்துரை வழங்கியதால் இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு பதவியேற்றது. மொத்தம் இருக்கும் 70 இடங்களில் ஆம் ஆத்மி பலம் 66 ஆக இருக்கிறது. இதில் தற்போது 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அல்கா லம்பா, ஜர்னைல் சிங், ஆதர்ஷ் சாஸ்திரி, ராஜேஷ் குப்தா உள்ளிட்ட அனைவரும் எம்.எல்.ஏவாக இருந்து கொண்டே பார்லிமென்ட்ரி செக்ரெட்டரி எனப்படும் அமைச்சர்களின் செயலாளர்கள் என்ற பதவியில் செயல்பட்டு வந்தனர்.

எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் யாரும் இப்படி இரண்டு பணிகளில் ஈடுபட கூடாது என்ற சட்டம் இருக்கிறது. இதற்கு எதிராக காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தது. இவர்கள் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்தனர்.

இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர பார்லிமென்ட்ரி செக்ரெட்டரி பதவியை இரட்டை ஆதாய பதவி இல்லை என்று கூறி கெஜ்ரிவால் சட்ட திருத்தம் கொண்டு வந்தார். ஆனால் இதற்கு முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கவில்லை.

இதன் காரணமாக தற்போது குடியரசு தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை ஒன்று வழங்கியது. அதில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்யலாம் என்று கூறியது.

இந்த பரிந்துரை ஏற்கப்பட்டு இவர்கள் 20 பேரும் தற்போது பதவிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனால் தற்போது அந்த 20 இடங்களும் காலியாகி இருக்கிறது.

மேலும் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற பலம் 66ல் இருந்து 46ஆக குறைந்து இருக்கிறது. ஆனாலும் மெஜாரிட்டி இருப்பதால் ஆம் ஆத்மி ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை. இந்த பிரச்சனை டெல்லியில் புயலை கிளப்பி இருக்கிறது.

tamil.oneindia.com

TAGS: