டெல்லி: அப்துல் சுபான் குரேஷி இந்தியாவின் பின்லேடன் என்று அழைக்கப்பட்டு வந்தவர். இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா என நிறைய நாட்டு உளவுப்படை இவரை தீவிரமாக தேடி வந்தது. உலகில் இருக்கும் பல தீவிரவாத இயக்கங்களுடன் இவர் நேரடி தொடர்பில் இருந்தார். குஜராத்தில் நடந்து குண்டுவெடிப்புகளை இவர்தான் நடத்தியது என்றும் கூறப்பட்டது. தற்போது இவர் டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் குடியரசு தினம் அன்று நாச வேலைகள் நடத்த திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
யார்
அப்துல் சுபான் குரேஷி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் செயல்பட்டு வந்த முக்கியமான தீவிரவாதி ஆவார். இவர் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர். படிப்பை முடித்து ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு பின் முஜாஹிதீன் அமைப்பில் சேர்ந்தார்.
மாஸ்டர் மைண்ட்
குஜராத்தில் உள்ள அஹமதாபாத் மற்றும் சூரத்தில் 2008 ஜூலை மாதம் 26ம் தேதி தொடர்ச்சியாக இருபது இடங்களில் குண்டு வெடித்தது. இந்த அனைத்து குண்டையும் தயார் செய்து கொடுத்தது இவர்தான். இதில் மொத்தம் 56 பேர் மரணம் அடைந்தார்கள். அதன்பின் குஜராத்தில் நடந்த சிறு சிறு குண்டுவெடிப்புகளுக்கும் இவர் காரணமாக இருந்தார்.
தொடர் திட்டங்கள்
அதேபோல் இவர் பெங்களூரில் 2014ல் நடந்த குண்டுவெடிப்புக்கும் காரணமாக இருந்தார். 2010ல் டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் மொத்தம் 20 பேர் பலியானார்கள். அதற்கும் இவர்தான் மூளையாக செயல்பட்டு இருக்கிறார். இவரை கடந்த 12 வருடமாக போலீஸ் தேடி வந்தது.
கைது செய்யப்பட்டார்
பல நாட்டு உளவுப்படை இவரை பிடிக்க முயற்சி செய்தது. ஆனால் தற்போது டெல்லி போலீஸ் இவரை கைது செய்து இருக்கிறது. டெல்லியில் உள்ள ஒரு மார்க்கெட்டில் வைத்து இவரை கைது செய்து இருக்கிறது. தற்போது 46 வயது நிரம்பியிருக்கும் சுபானுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.