பஸ் கட்டண உயர்வை கண்டித்து விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்… போக்குவரத்து ஸ்தம்பிப்பு

சென்னை: தமிழகத்தில் அரசு பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பேருந்து கட்டணத்தை திடீரென மாநில அரசு உயர்த்தியது.

டீசல் விலையுயர்வு, போக்குவரத்து ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த விலையேற்றம் என தமிழக அரசு தெரிவித்தது.

மேலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் பேருந்து கட்டணம் குறைவு என்றும் 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அரசு விளக்கம் கூறியது.

எனினும் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற கோரி பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அது முடியாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துவிட்டார். இதையடுத்து அரசியல் கட்சிகளும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளன.

இந்நிலையில் திண்டுக்கல், தஞ்சை, மதுரை வேலூர், தூத்துக்குடி, கோபி, காரைக்குடி, புதுக்கோட்டை, பழனி ஆகிய இடங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் 3-ஆவதுி நாளாக தொடர்கிறது. பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டது. பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை இந்த போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளதால் இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரிகிறது.

tamil.oneindia.com

TAGS: