ராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை அடிப்படையில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. எனினும் அதை மத்திய அரசு எதிர்த்தது. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பேரறிவாளனின் தந்தை உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் அவருக்கு 2 மாதங்களுக்கு பரோல் வழங்கப்பட்டது.

பரோல் காலம் முடிவடைந்ததும் பேரறிவாளன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகாலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் 3 மாத காலக் கெடு விதித்திருந்தது. இந்நிலையில் தன்னை விடுதலை செய்ய கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாத வரை தன்னை விடுதலை செய்யும் படியும் விதிக்கப்பட்ட தண்டனைக்கு மேல் தான் அனுபவித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். வெடிகுண்டுக்கான பேட்டரியை இலங்கையில் இருந்து வரவழைத்துக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது புகார் எழுந்தது.

இவர்கள் 7 பேரின் விடுதலைக்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பேரறிவாளனின் மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை பிப்ரவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

tamil.oneindia.com

TAGS: