`தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?’ சங்கரமடம் கேள்வி

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் எழுந்து நின்ற விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத சங்கரமடத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், தமிழை அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றார். “மடத்தில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களுக்கு கூட பக்தர்கள் எழுந்து நிற்பார்களே ஒழிய மடாதிபதிகள் எழுந்து நிற்க மாட்டார்கள்” என்று கூறிய அவர் “இது எங்கள் சம்பிரதாயம்” என்றும் தெரிவித்தார்.

தேசிய கீதம் பாடும்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்றாரே ஏன் என்ற கேள்விக்கு, “தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காவிட்டால் அது குற்றம்” என்று கூறிய அந்த நிர்வாகி, “தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?” என்று கேள்வி எழுப்பினார்.

“சர்ச்சைக்குள்ளான அந்த நிகழ்ச்சி தனியார் நிகழ்ச்சி என்பதால், இறைவணக்கம்தான் போட்டிருக்கவேண்டும், ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துப் போட்டார்கள் என்று தெரியவில்லை”, என்றும் அவர் கூறினார்.

காஞ்சி மடம் தமிழுக்கு நிறைய செய்திருப்பதாகக் கூறிய அவர், “1930களிலேயே தமிழ்ப் பண்டிதர்களுக்கு சம்ஸ்கிருத பண்டிதர்களுக்கு சமமாக தங்கத்தாலான தோட்டா, (கங்கனம் போன்ற ஓர் ஆபரணம்) போட்டிருக்கிறார் அப்போதைய சங்கராச்சாரியார்” என்றார் அவர்.

“கடந்த காலத்தில் சங்கர மடத்தின் கல்வி நிறுவனங்களின் விழாக்களுக்கு குடியரசுத் தலைவர் போன்றவர்கள் வருகை தந்தபோது அதுபோன்ற சந்தர்ப்பங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியபோது மடாதிபதிகள் என்ன செய்தார்கள் என்பது குறித்த தரவுகளைத் திரட்டிவருகிறோம். அது கிடைத்தால் சமூக வலைத்தளத்தில் தெரிவிப்போம்”, என்றார் அவர்.

தமிழ்த்தாய் வாழ்த்து, பின்னணி என்ன?

‘நீராரும் கடலுடுத்த’ என்று தொடங்கும் இந்தப் பாடலின் பின்னணி என்ன? இது எப்படி தமிழ்த்தாய் வாழ்த்தாக அங்கீகரிக்கப்பட்டது? சங்கராச்சாரியார் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுக்கிறார்? தமிழ்த் தாய் வாழ்த்து தொடர்பான அரசாணை என்ன சொல்கிறது? இதன் பின்னணியைப் பார்ப்போம்.

பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா தொகுத்த தமிழ் – சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமி அரங்கத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது மேடையில் உள்ள அனைவரும் எழுந்து நின்றபோது விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை. ஆனால், நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அவர் எழுந்துநின்றார். இந்த காட்சிகள் தொலைக் காட்சியில் வெளியானதை அடுத்து இது பெரும் விவகாரமாக வெடித்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததால் எழுந்து நிற்கவில்லையென்று சங்கரமடத்தின் சார்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மரபல்ல என்று அவர்கள் கூறியதாகவும் சில ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தப் பாடல் தமிழறிஞர் பெ.சுந்தரனார் 1891ல் வெளியான தமது ‘மனோன்மணீயம்’ என்ற நாடக நூலுக்கு எழுதிய தமிழ் வாழ்த்துப் பா.

1970ம் ஆண்டு ஜூன் மாதம், கருணாநிதி முதல்வராக இருந்தபோது இது தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டது.

நீக்கப்பட்ட வரிகள்

அப்படி ஏற்கும்போது சம்ஸ்கிருதம் போல அழியாத தமிழின் சிறப்பாக சுந்தரனார் குறிப்பிடும் சில வரிகளை நீக்கிவிட்டே அது அதிகாரப்பூர்வ வாழ்த்தாக ஏற்கப்பட்டது.

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல், கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்…” என்பதே அந்த நீக்கப்பட்ட வரிகள்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்

மோகன ராகத்தில், திஸ்ர தாளத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையில் அது பாடப்படவேண்டும் என்பது அரசாணை. இதில் எங்கும், எழுந்து நிற்பதைப் பற்றியோ, அவமதிப்பவர்களுக்கான தண்டனை பற்றியோ குறிப்பு இல்லை.

மதச்சார்பின்மையும் தமிழ் வாழ்த்தும்

தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்வளர்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநரும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான மா.ராசேந்திரனிடம் கேட்டோம்.

1970ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டது என்றார்.

மதச் சார்பற்ற அரசுக்கு மத நம்பிக்கையோடு கூடிய ஓர் இறைவணக்கப் பாடலைப் பாடுவது பொருத்தமாக இருக்காது என்பதால், மொழி வணக்கப்பாடல் அறிமுகமானது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

பாரதிதாசன் பாடல் பரிசீலனை

பாரதிதாசன் பாடல் ஒன்றும் இதற்கான பரிசீலனையில் இருந்தது என்று கூறிய ராசேந்திரன், இறுதியில் சுந்தரனாரின் பாடல் சிறப்பாக இருந்ததாக முடிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டது என்றார் அவர்.

நல்லிணக்கத் தன்மையுள்ள பாடல் இது என்று குறிப்பிட்ட ராசேந்திரன், மாநிலத்தின் ஆட்சி மொழியாக உள்ள ஒரு மொழியை அரசு நிகழ்ச்சிகளுக்கு முன்பு வாழ்த்திப் பாடுவது பண்பான செயல் என்றும் குறிப்பிட்டார்.

விஜயேந்திரர் கலந்துகொண்டது நேரடியாக அரசு நிகழ்ச்சி அல்ல என்றபோதும், ஆளுநர் கலந்துகொண்டதால் இது அரசு நிகழ்ச்சிக்கு ஒப்பானதே என்று கூறினார் ராசேந்திரன்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காததோடு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது சங்கர மடத்தின் மரபல்ல என்று கூறியிருப்பது மனதை வேதனைப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.

“சங்கராச்சாரியார்கள் உயர்ந்த பீடத்திலும், பார்க்க வருகிறவர்கள் தரையில் அமர்வதாகவுமே இவர்கள் மரபு இருந்துள்ளது. ஆனால், ஜெயலலிதா வந்தபோது அவருக்கு சரியாசனம் கொடுத்து அவர்கள் அந்த மரபை மீறவில்லையா?” என்று கேட்டார் ராசேந்திரன்.

தேசிய கீதம் என்பதுகூட அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றதல்ல, அரசியல் நிர்ணய சபையால் அச்சபை முடிவதற்கு முன்பு கடைசி நேரத்தில் ஏற்கப்பட்டதுதான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் குறித்த இழிந்த பார்வையா?

இதுகுறித்து தமிழ் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகுவிடம் கேட்டபோது, “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரரின் செயல் நிச்சயம் தமிழை, தமிழர்களை அவமதிக்கும் செயல்தான். இது ஒரு தனித்த செயல் மட்டுமல்ல. தமிழ் மொழி பற்றி, சங்கரமடத்தின் பார்வையை வெளிக்காட்டுவதே இந்தச் செயல். தமிழ் பற்றிய சங்கர மடத்தின் பார்வைக்கு பல சான்றுகள் உண்டு,” என்றார்.

“ஆட்சி மொழிக் காவலர் ராமலிங்கனார் அப்போது மடாதிபதியாக இருந்த சந்திரசேகரரை ஒரு முறை சந்தித்தபோது அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சந்திரசேகரர் சம்ஸ்கிருதத்திலேயே பதில் சொன்னதாகவும், தமிழ் தெரிந்தும் அவர் ஏன் தமிழில் பேசவில்லை என்று கேட்டபோது, பூஜை நேரத்தில் அவர் ‘நீச பாஷை’யில் பேசமாட்டார் என்று பதில் சொல்லப்பட்டதாகவும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இதை ராமலிங்கனாரே பதிவு செய்துள்ளார். இதுதான் தமிழ் குறித்த சங்கர மடத்தின் பார்வை,” என்றார் தியாகு.

“கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், இந்திய தேசியத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும் பொது நிகழ்வுகளில் பங்கேற்ற நேரங்களில் கடவுள் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டபோதெல்லாம் பெரியார் எழுந்து நின்றுள்ளார். அது சக மனிதர்களுக்கான மரியாதை,” என்றார் அவர்.

இந்த செயலுக்கு தண்டனையெல்லாம் அளிக்க சட்டத்தில் வழியில்லை. ஆனால், இதுபற்றி விஜயேந்திரர் விளக்கம் அளிக்கவேண்டும். வருத்தமாக இருந்தாலும், தமிழ் பற்றிய அவர்களது பார்வையாக இருந்தாலும் அவரே அதை வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றார் தியாகு.

அரசியல் எதிர்வினை

தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, இது தமிழ்த்தாயை அவமானப்படுத்தியதாகவே கருதப்படும் என்று குறிப்பிட்டார்.

தி.க., ம.தி.மு.க., பாமக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விஜயேந்திரருக்கு இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளன.

பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் இது தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக காவல் நிலையம் ஒன்றில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டாள் தொடர்பான சர்ச்சையில் வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டுமென பாரதீய ஜனதா கட்சியினர் தீவிரமாக கருத்துக்களை கூறிவந்த நிலையில், இந்த விவகாரம் வெடித்திருப்பது சமூக வலைதளங்களில் வாதப் பிரதிவாதங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

#tamil_insulted, #விஜயேந்திரா_மன்னிப்புக்கேள் என்ற ஹேஷ்டாகுகளுடன் பலரும் கண்டனக் கருத்துக்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

(பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் அளித்த தகவல்களுடன்.)

TAGS: