எந்த மாநிலத்துடன் கர்நாடகாவுக்கு பிரச்சினை என்றாலும் பாதிக்கப்படுவது தமிழர்கள்தான்..

பெங்களூர்: மகதாயி நதிநீர் விவகாரம் தொடர்பாக இன்று கர்நாடகா முழுக்க பந்த் நடைபெற்றது. இதனால் காலை முதல் கர்நாடக அரசு பஸ்களும், பெரும்பாலான பெங்களூர் நகர பஸ்களும் இயங்கவில்லை. தமிழக அரசு பஸ்கள் ஒசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. தமிழக பதிவு எண் கொண்ட கார்கள் கூட கர்நாடக எல்லைக்குள் செல்லவில்லை.

கோவாவுடன்தான் பிரச்சினை என்றாலும், கன்னட அமைப்பினர் தமிழர்களைதான் குறி வைப்பார்கள் என்பதால் தமிழக அரசு பஸ்களை முன்னெச்சரிக்கையாக கர்நாடகாவிற்குள் இயக்கவில்லை.

மாலை 4 மணி முதல் கர்நாடக அரசு பஸ்கள் பலவும் இயங்க தொடங்கின. விலை உயர்ந்தவை என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெங்களூர் நகர ஏசி பஸ்களும் இயங்கின. ஆனால் மருந்துக்கு கூட தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களையோ, அரசு பஸ்களையோ பெங்களூரில் பார்க்க முடியவில்லை.

மாலை 6 மணிக்கு மேல்தான் அவை தமிழக எல்லையில் இருந்து கிளம்பின. எந்த மாநிலத்துடன் கர்நாடகாவுக்கு பிரச்சினை என்றாலும், அஞ்சி நடுங்குவது என்னவோ தமிழர்கள்தான் என்பது இன்று மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

மகதாயி பிரச்சினைக்கே தமிழக பஸ்கள் மட்டும் இயங்கவில்லை என்றால், காவிரி பிரச்சினையின்போது கர்நாடக வாழ் தமிழர்கள் நிலையை சொல்லி தெரியவேண்டியதில்லை.

tamil.oneindia.com

TAGS: