ஆதார் அட்டையில் பாலினத்தை மாற்றுவது எப்படி?: திருநங்கைகளுக்காக நடத்தப்பட்ட பிரத்யேக முகாம்

இந்தியாவிலேயே முதல்முறையாக திருநங்கைகளுக்கு அரசாங்கத் திட்டங்களைக் கொண்டுசெல்லும் முகாம் ஒன்றை சென்னை நகரத் தபால் துறை நடத்திமுடித்திருக்கிறது. சென்னையில் நடந்த இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு அரசின் திட்டங்கள் குறித்துத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு அடையாள அட்டைகளில் திருநங்கைகளை மாற்றுப் பாலினத்தவராக குறிக்கும் வசதி இருந்தாலும்கூட, இதனைச் செய்வதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. தவிர, அரசு அலுவலகங்களில் மாற்றுப் பாலினத்தவராக சென்று தங்களுக்கான அடையாள அட்டையைப் பெறுவதிலும் சிரமங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.

இந்த நிலையில், ஏற்கனவே ஆதார் அட்டையில் ஆணாகக் குறிப்பிட்டிருந்தவர்கள் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்ளும் வகையிலும் திருநங்கைகளுக்கு என அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சென்னை தபால் துறை சமீபத்தில் ஒரு முகாமை நடத்தி முடித்துள்ளது.

இதில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்களும் படிவங்களும் வழங்கப்பட்டதாக, சென்னையின் தலைமைத் தபால் அதிகாரி ஆலோக் ஓஜா பிபிசியிடம் தெரிவித்தார். இதுபோல திருநங்கைகளுக்காக முகாம் நடப்பது இந்தியாவிலேயே முதல் முறை எனவும் அவர் கூறினார்.

“இந்த முகாமில் பங்கு பெற்றது உண்மையிலேயே பயனுள்ளதாக இருந்தது. பொதுவாக எங்களுக்கு எந்தத் தேவைக்கு எங்கே அணுகுவது என்பது தெரியாது. ஆனால், இந்த முகாமில் அவை விளக்கப்பட்டன. தவிர, வருடத்திற்கு 12 ரூபாயில் பிரதம மந்திரியின் விபத்துக் காப்பீட்டிலும் பலர் இணைக்கப்பட்டனர்” என்கிறார் நிறங்கள் அமைப்பைச் சேர்ந்த சங்கரி.

ஜனவரி 27ஆம் தேதி நடைபெறும் ஆதார் முகாமில், அவர்கள் கேட்கும் திருத்தங்கள் செய்துதரப்படும் எனவும் சென்னை தலைமைத் தபால் நிலையத்தில் திருநங்களுக்கென தனியாக ஒரு மேஜை அமைக்கப்படும் எனவும் தபால்துறை தெரிவித்துள்ளது. -BBC_Tamil

TAGS: