மீனவர்களின் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண புதிய கருவி… இஸ்ரோ தலைவர் சிவன்

நாகர்கோவில் : மீனவர்கள் சர்வதேச எல்லைப்பிரச்னையில் இருந்து விடுபட புதிய கருவி ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது. அது இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ ஆய்வு மையத் தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் கடந்த ஜனவரி 12ம் தேதி பதவியேற்றார்.

முன்னதாக அவர் விக்ரம்சாராபாய் விண்வெளி நடுவத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தார், இதனையடுத்து இவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சரக்கல்விளையில் இவருக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

எல்லைப் பிரச்னை தீர்க்க ‘நாவிக்’

இதில் பேசிய சிவன், மீனவர்களுக்கு பயன்படும் வகையில் பல கட்ட சோதனைகள் மூலம் ‘நாவிக்’ கருவி தயாரிக்கப்பட்டு உள்ளதும் இதன் மூலம் மீனவர்கள் சர்வதேச எல்லை பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். தமிழக மீனவர்கள் மட்டுமின்றி இந்திய மீனவர்கள் அனைவருக்கும் எல்லை பிரச்னை மிகப்பெரிய துன்பத்தை ஏற்படுத்துகிறது. அதை இந்த கருவி மூலம் தீர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

மருத்துவத்துறையில் முன்னேற்றம்

மேலும், ஜி-சேட் 11 என்ற சாட்டிலைட்டை இரண்டு மாதங்களில் விண்ணில் செலுத்த இருக்கிறோம். இதன் மூலம் ஒரு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிக்கு மற்றொரு மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர் செயற்கைக்கோள் தொடர்பு மூலம் நேரடியாக சேவை செய்ய முடியும். மருத்துவத்துறையில் இது நம் நாட்டை முன்னேற்றும் என்று அவர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு ஆர்வம்

மேலும், இஸ்ரோ கண்டுபிடிப்புகள் நாட்டு மக்களுக்கு முழுமையாக கிடைக்க முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். ‘லோ எர்த் மிஷன்’ அடுத்த மாதம் 14ம் தேதி ஏவப்படும். விண்வெளி துறை மூலம் நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய சேவை ஏற்படுத்துவோம். விண்வெளி துறையில் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளது. எனவே மாணவர்கள் விண்வெளித்துறைக்கு வருவதில் ஈடுபாடு காட்ட வேண்டும்.

மக்களின் புதுப் புதுத் தேவைகள்

மக்களுக்கு புதுப் புது தேவைகள் ஏற்படுகிறது. அந்த தேவைகளுக்கு ஏற்ப புதிய செயற்கைக்கோள்கள் உருவாக்கப்படும். விண்வெளி துறையில் புதிய புதிய அப்ளிக்கேஷன்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில், விண்வெளித்துறையில் இந்தியா மட்டுமே மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளது என்று சிவன் அவ்விழாவில் பேசினார்.

tamil.oneindia.com

TAGS: