காஞ்சிபுரம்: தமிழ்த் தாய்த் வாழ்த்தை அவமதித்ததால் சர்ச்சையில் சிக்கி மடத்துக்குள்ளேயே முடங்கியிருக்கும் காஞ்சி இளைய சங்கராச்சாரி விஜயேந்திரரை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ திடீரென சந்தித்து பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டால் எழுந்து நிற்பது சங்கராச்சாரியார்கள் மரபு அல்ல எனக் கூறி அவமதித்திருக்கிறார் விஜயேந்திரர். இதனால் அவரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள காஞ்சி சங்கர மடங்கள் நாள்தோறும் முற்றுகையிடப்பட்டு வருகின்றன. விஜயேந்திரரை கைது செய்யக் கோரி பல இடங்களில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திடீரென மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜூ நேற்று காஞ்சி சங்கர மடத்துக்கு வருகை தந்தார். முதலில் சர்ச்சைக்குரிய விஜயேந்திரரை சந்தித்தார் கிரண் ரிஜுஜூ. அப்போது பிரசாதங்களை கிரண் ரிஜுஜூவின் கைகளில் கொடுக்காமல் சற்று தொலைவில் கையை உயர்த்தி தூக்கி போட்டார். பின்னர் ஜெயேந்திரரையும் அவர் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. தங்களுக்கு எதிராக சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில் மத்திய அரசு தங்கள் பக்கம்தான் என்பதைக் காட்ட காஞ்சி சங்கரச்சாரியார்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனே கிரண் ரிஜுஜூ வருகை என்றும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.