மறுக்கப்படும் வாய்ப்புகள்: இந்தியாவில் மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே உயர்கல்வி சாத்தியமா?

இந்தியா சமீபத்தில்தான் தனது குடியரசு தினத்தை கொண்டாடியுள்ளது. எனினும் சில அரசு நிறுவனங்கள் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களில் ஒன்றான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் உள்ளன.

அதற்கு முக்கிய உதாரணம், பெங்களூரில் உள்ள, இந்திய கல்வி அமைப்பின் கிரீடங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்) எனப்படும் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் சிலர் விரக்தியின் உச்சத்திற்கே சென்று உயர் நீதிமன்றத்தை நாடியதுதான்.

“ஐ.ஐ.எம்-களின் ஆசிரியர்களின் சமூக பின்புலத்தைப் பார்க்கும்போது, அவை ஒரு ஜனாநாயகக் குடியரசின் மாண்புகளை பிரதிபலிப்பதாகக் தோன்றவில்லை. அது ஒரு சமூகப் புறக்கணிப்பு நடைமுறையையே பிரதிபலிக்கிறது,” என்கிறார் பிபிசி இடம் பேசிய ஐ.ஐ.எம்-பெங்களூரின் முன்னாள் மாணவரான தீபக் மல்கன்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தீபக் மற்றும் அவரது நண்பரான சித்தார்த் ஜோஷி ஆகியோர் மேற்கொண்ட ஒரு சமூக ஆய்வு ஐ.ஐ.எம் முன்னாள் மாணவர்களை மட்டுமல்லாமல், கல்வித் துறையில் இருப்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

“இந்தியாவின் வெறும் 5-6% மக்கள்தொகை கொண்ட சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் நாடெங்கும் உள்ள ஐ.ஐ.எம்-களில் 97% ஆசிரியர் பணியிடங்களை ஆக்கிரமித்திருந்தனர். அந்நிறுவனங்களின் தன்னாட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, நியாயப்படுத்த முடியாதவற்றை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செய்துள்ளனர்,” என்கிறார் தீபக்.

இந்தியாவில் உள்ள 13 ஐ.ஐ.எம்-களில் பணியாற்றும் 642 ஆசிரியர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 17 பேரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான்கு மட்டுமே இருந்தனர். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே இந்தியாவில் ஓர் ஐ.ஐ.எம்-இல் பணியாற்றுகிறார்.

“சாதி மற்றும் வர்க்க ரீதியாக வசதி படைத்தவர்களுக்கு மட்டுமான இடங்களாக ஐ.ஐ.எம்-கள் மாறிவிட்டன. இந்தியாவில் பாலின பன்முகத்தன்மைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சமூகப் பன்முகத்தன்மைக்கு கொடுக்கப்படுவதில்லை,” என்கிறார் ஐ.ஐ.எம்-அகமதாபாத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கான இடங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாததை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள, அந்நிறுவனத்தின் முன்னாள் மாணவர் அமைப்பைச் சேர்ந்த அனில் வாக்டே.

இட ஒதுக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படாமல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டதால் அந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஐ.ஐ.எம்-களில் முதுநிலை மேலாண்மை (எம்.பி.ஏ) மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

தங்கள் அடையாளத்தை வெளிக்காட்ட விரும்பாத மாணவர்கள் சிலர், ஐ.ஐ.எம்-களில் மறைமுகமான சாதிய பாகுபாடு நிலவுகிறதாகக் கூறுகின்றனர். பின்தங்கிய,ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் மாணவர்களை கல்வி மற்றும் சமூக அளவில் தயார்படுத்தும் ஆசிரியர்கள் இல்லை என்பதே இப்போதைய பிரச்சனை.

“தகுதியுள்ளவர்களுக்கான இடங்களை பறித்துக்கொண்டவர்களாக நீங்கள் (இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள்) பார்க்கப்படுகிறீர்கள். முனைவர் பட்டப் படிப்பைப் பொறுத்தவரை பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சேர்வதற்கான வாய்ப்பே வழங்கப்படுவதில்லை. எம்.பி.ஏ படிப்பில் வாய்ப்பு வழங்கப்பட்டாலும் உள்ளடக்கிகொள்வது இன்னும் நிறைவேறவில்லை,” என்கிறார் தீபக்.

சமூகப் பன்முகத்தன்மை இல்லாமல் இருப்பது சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது?

“இது சமூகத்தின் விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்த மக்களை மட்டுமல்லாமல் அனைவரையும் வறுமையில் தள்ளும். தொழில், அரசு நிர்வாகம், சமூகக் கலப்பு ஆகியவற்றை பற்றிய புரிதலே இல்லம் போய்விடும். தொழில் சிறந்த அறிவுடன் விளங்க அப்புரிதல்களே முக்கியம். நமது பொதுப் புத்தி மிகவும் போதாமையுடன் உள்ளது. எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் நோக்கமும் அறிவுசார்ந்த புதிய ஒளியைப் பாய்ச்சுவதுதான்,” என்கிறார் தீபக்.

வரும் 2018-19ஆம் கல்வியாண்டில் பெங்களூர் மற்றும் இந்தூர் ஆகிய ஊர்களில் உள்ள ஐ.ஐ.எம்-களே முனைவர் பட்டத்துக்கான ஆய்வு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. திருச்சியில் உள்ள ஐ.ஐ.எம்-உம் அதற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது, என்று தீபக் தெரிவித்துள்ளார்.

ஐ.ஐ.எம் பெங்களூரின் இயக்குநர் பேராசிரியர்.ஜி.ரகுராம் கடந்த காலங்களில் முனைவர் பட்ட ஆய்வில் ஏன் அனைத்துத் தரப்பினருக்குமானதாக இல்லைஎன்பதைப் பற்றி பேச மறுத்துவிட்டார்.

“அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், அனைவரையும் உள்ளடக்கிச் செல்லவே விரும்புகிறோம். அதையே மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமும் சில காலம் முன்பு வலியுறுத்தியுள்ளது. அந்த நடைமுறையைப் (இட ஒதுக்கீடு வழங்குவதை) பின்பற்றி ஐ.ஐ.டி-கள் உள்ளிட்ட சில கல்வி நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்த அளவு வெற்றி பெற்றுள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எனவே, நாங்களும் அதைப் பின்பற்ற முடிவு செய்துள்ளோம்,” என்கிறார் அவர். -BBC_Tamil

TAGS: