4 மாநில நீதிமன்றத்தில் இந்திக்கு அனுமதி… தமிழுக்கு மட்டும் ஏன் தடை சொல்கிறது மத்திய அரசு?

சென்னை : அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழை வழக்காடு மொழியாக்க மட்டும் ஏன் மத்திய அரசு தடை போடுகிறது. தங்களுக்கு என்ன நீதி கிடைத்துள்ளது என்பதை தங்கள் மொழியில் தெரிந்து கொள்ளக் கூடிய உரிமை கூட தமிழக மக்களுக்கு கிடையாதா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாமலே இருப்பதற்கு யார் காரணம்?

இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அளிக்கப்படும் தீர்ப்புகள் அந்தந்த மாநில மொழிகளில் இருந்தாலே அவர்களுக்கு என்ன நீதி கிடைத்திருக்கிறது என்பது தெரியும். எனவே நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தங்கள் தரப்பில் வழக்கறிஞர் என்ன வாதாடுகிறார் என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக மாநில மொழியான தமிழில் இருக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்றத்தில் நடக்கும் தங்களின் வழக்கின் போக்கு என்ன என்பது ஆங்கில மொழி தெரியாதவர்களுக்கு புரியாத விஷயமாகவே இருக்கிறது. பல்வேறு மொழி பேசம் தேசிய இனங்கள் வாழும் நாட்டில் அவர்களுக்கான மொழியுரிமையை வழங்காமல் ஒற்றைத் தேசம் என்ற ஒத்துவராத வாதத்தை சுட்டிகாட்டுகின்றனர்.

12 ஆண்டுகளாக கிடப்பில்

புரியாத மொழியை திணிக்காமல் வழக்கு போடுபவர்களுக்கு புரிந்த மொழியில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. இதனை வலியுறுத்தி 2006ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சுமார் 12 ஆண்டுகளைக் கடந்தும் நிலவையிலேயே இருக்கிறது.

மத்திய அரசுக்கு அழுத்தம் தராத மாநில அரசுகள்

தமிழை வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தொடர்ந்து மத்திய அரசுகள் முட்டுக்கட்டை போட்டு வருவதாகவே குற்றம்சாட்டப்படுகிறது. தற்போது இருக்கும் பாஜக மட்டுமல்ல காங்கிரஸ் அரசும் இது குறித்த அறிவிப்பை கிடப்பிலேயே தான் போட்டு வைத்திருந்தது. மத்திய அரசின் இந்த அலட்சியத்தில் ஆளும் கட்சிகள் சரியான அழுத்தத்தை மத்திய அரசுகளுக்கு கொடுக்காததும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஏன் இந்த நிலைப்பாடு?

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு கூறுகிறது, ஆனால் இதே உச்சநீதிமன்ற அமர்வின் அனுமதியோடு தான் அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தியை பயன்படுத்த அனுமதித்துள்ளது. ஆனால் தமிழுக்கு மட்டுமே ஏன் இந்த புறக்கணிப்பு? உச்சநீதிமன்றம் ஏன் இந்த இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கிறது.

உச்சநீதிமன்ற ஆலோசனை தேவையில்லை

மற்றொரு புறம் மாநில மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை கேட்கத் தேவையில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த கருத்தும் சுட்டிக் காட்டப்படுகிறது. எனினும் திட்டமிட்டே தமிழகத்தின் இந்த கோரிக்கை புறக்கணிக்கப்படுவதற்கு மத்திய அரசுக்கு தமிழை வழக்காடு மொழியாக்க மனம் இல்லை என்பதன் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: