வளர்ச்சி குஜராத்தின் பரிதாபம்-நர்மதை அணையின் கடைசி சொட்டு நீருக்காக காத்திருக்கும் 10,000 கிராமங்கள்

அகமதாபாத்: இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலம் குஜராத் என்பது அப்பட்டமான பொய் என்பதை தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் இப்போது அம்பலப்படுத்துகிறது. நர்மதை அணையின் கடைசி சொட்டு நீரைக் கொண்டுதான் 10,000 கிராமங்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறது குஜராத்.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் பஞ்சத்தை முன்வைத்து சட்டசபை தேர்தலை ஒத்திப் போடவும் முயற்சித்தது பாஜக என்பதும் வரலாறு.

தற்போது குஜராத் மாநிலத்தின் உயிர்நாடியான நர்மதை அணை நீர்மட்டம் படுமோசமாகிவிட்டது. இதனால் விவசாயத்துக்கும் மக்கள் பயன்பாட்டுக்கும் கை பிசைந்து நிற்கிறது குஜராத்.

இந்நிலையில் டெல்லியில் கூடிய நர்மதை அணை கட்டுப்பாட்டு குழுவானது, அந்த அணையின் கசிவு மற்றும் எஞ்சிய நீரையும் கூட குஜராத் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதாவது நர்மதை அணையின் கடைசி சொட்டு நீரையும் உறிஞ்சி குடிநீருக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, கடைசி சொட்டு நீரையும் பயன்படுத்த அனுமதித்திருப்பதன் மூலம் 10,000 கிராமங்கள், 167 நகரங்களுக்கு குடிநீர் கிடைக்கும் என நெகிழ்ந்து போயுள்ளார்.

கோடைகாலத்தில் சொட்டு நீரும் இல்லாமல் குஜராத் வறட்சியின் கோரப் பிடியில், தண்ணீர் பஞ்சத்தின் உச்ச அவலத்தை எதிர்கொள்ள இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: