இஸ்லாமாபாத்/ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் ஜம்முவுக்கு அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமில் நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் பயங்கரவாதிகள் சிலர் நுழைந்தனர். ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தை சேர்ந்த அவர்கள், அங்கிருந்த ராணுவ குடியிருப்புகள் மீது கையெறி குண்டுகளை வீசியும், கண்ணில் பட்ட அனைவரையும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
இதில் 5 ராணுவ வீரர்கள், ஒரு ராணுவ வீரரின் தந்தை உயிரிழந்தனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இமுகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். கடந்த சில மாதங்களாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது, இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் வகையில் இந்திய ராணுவத்தை திசைதிருப்பும் முயற்சியாகவும் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறிய தாக்குதலில் நடத்தி வருகிறது.
கடந்த சனிக்கிழமை அன்று சஞ்சுவான் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதல் இவ்வருடத்தில் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தி உள்ளது என இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டிஉள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் கமிஷ்னர் எஸ்பி வாய்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தொலைபேசி உரையாடல்கள் இடைமறிப்பு செய்யப்பட்ட போது பயங்கரவாத தாக்குதல் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்பட்டது என்பது தெரியவந்து உள்ளது,” என தெரிவித்து இருந்தார். இதனை வழக்கம்போல் பாகிஸ்தான் மறுத்து உள்ளது.
பாகிஸ்தான் எச்சரிக்கை
முழு விசாரணையை நடத்தாமல் எங்களை குற்றம் சாட்டாதீர்கள் என பாகிஸ்தான் சாடி உள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், “பொறுப்பற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் சுமத்துவது மற்றும் எந்தஒரு விவகாரத்திலும் முழுமையான விசாரணை என்பது முன்னெடுக்கப்படாமலே பாகிஸ்தானை சாடுவது என்பதும் இந்திய அதிகாரிகளின் வழக்கமான முறையாகும்,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீரில் ஆயுதமேந்திய கிளர்ச்சியை கட்டுப்படுத்த முயற்சியை செய்யும் இந்தியா அதிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கு பாகிஸ்தானுக்கு எதிராக குற்றம் சாட்டி வருகிறது எனவும் பாகிஸ்தான் கூறிஉள்ளது.
காஷ்மீரில் வெளியே தெரிவிக்கப்படாத அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறலையும், எல்லையில் தாக்குதல்களையும் இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்த வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட தகவலில், “விசாரணைக்கு முன்னதாகவே இந்திய மீடியாக்கள் மற்றும் அதிகாரிகள் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்,” என குற்றம் சாட்டியிருந்தது.
-dailythanthi.com