கர்நாடகாவிலிருந்து முதல் குரல்.. ஹிந்தி திணிப்பை எதிர்த்து உருவாகும் திராவிட மாநிலங்கள் கூட்டமைப்பு?

சென்னை: திராவிட மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா அளித்துள்ள பேட்டி முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.

திராவிடம் என்ற சொல்லாடலை தமிழகம் போல, கர்நாடகா உள்ளிட்ட பிற தென் மாநிலங்கள் பயன்படுத்தாமல் இருந்த சூழலில், கர்நாடகாவில் இருந்து, திராவிட மாநிலங்களை முன்னிறுத்தி வந்துள்ளது.

காலம் கடந்த ஞானோதய குரலாக இருந்தாலும், இது வரவேற்கத் தக்கது என்பது தமிழறிஞர்கள் கருத்தாக உள்ளது.

மறந்துவிட்ட வார்த்தை

திராவிட மொழிகளின் தாய் தமிழ் என்பதுதான், பிற மாநிலங்கள் அதிலும் குறிப்பாக கர்நாடகா, இந்த வார்த்தையை மறைக்க முற்பட்டதற்கு காரணம். ஆனால் இப்போது, கர்நாடகா முக்கியமான ஆபத்தை உணர்ந்துள்ளது. தமிழ் எழுத்துக்களை தார்பூசி அழித்தபடியும், தமிழ் பாடல்கள் ஒலிபரப்பிய எப்.எம் சேனல்கள் ஆபீஸ் மீது கல்வீசி தாக்கியபடியும், மறுபக்கம் ஹிந்தி மொழியையும், ஹிந்தி பாடல்களையும் அனுமதித்த பழைய கர்நாடகா இல்லை இப்போது.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள்

சுமார் 50 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் எழுந்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு அலை இப்போது கர்நாடகாவில் வீசி வருகிறது. இதனால்தான், விந்திய மலைக்கு அங்கேயிருந்து வரும் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக திராவிடம் என்ற கேடயம் கர்நாடகாவுக்கு இப்போது தேவைப்படுகிறது. இதில் முன்னிலையில் இருக்கும் மாநிலம் தமிழகம் என்பதால், ஹிந்தி திணிப்புக்கு எதிரான போரில் தமிழகத்தை தலைமை தாங்க அழைத்துள்ளார் கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா.

ஹிந்தி நுழைய வாய்ப்பு

தமிழ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியொன்றில் இதை அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டார் அவர். மேலும் அவர் கூறிய, திராவிட மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமானது. நதிநீர் பிரச்சினைகளால் திராவிட மாநிலங்கள் அடித்துக்கொண்டு கிடக்கும் சூழலில் ஹிந்தி எளிதாக நுழைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

உண்மையான பிரச்சினைகள்

திராவிட மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்கி ஹிந்தி திணிப்பும், தென் மாநிலங்களின் வளங்கள் ஹிந்தி பேசும் மாநில மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளூர் மக்கள் ஓட்டாண்டியாக்கப்படுவதும்தான் உண்மையான பிரச்சினை என்பதையும், மத்திய அரசின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் ஹிந்தி பேசும் மக்களுக்கே முன்னுரிமை போகும் வகையில் கொள்கைகள் மாற்றப்பட்டுள்ள விவகாரங்கள் விவாதிக்கப்பட வேண்டியது கட்டாயம்.

முன்னெடுக்குமா தமிழகம்?

மழை அதிகமாக பெய்யும் வருடங்களில் நதிநீர் பிரச்சினை எழுவதில்லை. ஆனால் ஹிந்தி திணிப்பு அப்படியானது இல்லை. திராவிட மொழிகளை சிதைத்து அழித்துவிடும் நோக்கத்தோடு வருவது. இதனால் மொழி, பண்பாடு என அத்தனையையும் தென் மாநில மக்கள் பறி கொடுக்கும் சூழல் உருவாகும். இதை புரிய வைக்க அவசர தேவை திராவிட மாநிலங்களின் கூட்டமைப்பு. அதற்கான கோரிக்கை தேசிய கட்சி ஆளும், கர்நாடகாவில் இருந்து வந்துள்ளது பெரும் சிறப்பு. எனவே பிற மாநிலங்களை இணைத்துக்கொள்வதில், பெரிய சிக்கல் எழாது என நம்பலாம். மாட்டிறைச்சி தடையால் தனி நாடு கோரிக்கையை முன்வைத்த கேரளாவுக்கும், சிறப்பு அந்தஸ்துக்காக கெஞ்சிக்கொண்டிருக்கும் ஆந்திராவுக்கும் திராவிட கூட்டமைப்பில் இணைவதில் தகராறு இருக்கப்போவதில்லை. மொழி, கலாச்சாரம், வேலை வாய்ப்பு, பண்பாடு போன்றவற்றை காப்பாற்ற திராவிட மாநில கூட்டமைப்பு உறுதுணையாக இருக்க வாய்ப்பு உள்ளது.

tamil.oneindia.com

TAGS: