சென்னை: தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையேயான காவிரி நதிநீர் விவகாரமானது இரு நூற்றாண்டுகளைக் கடந்து நீடிக்கிறது. உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு அளிக்கப் போகும் தீர்ப்பு இப்பிரச்சனைக்கு முடிவைக் கொண்டு வருமா? என்பதுதான் விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
2007-ல் வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்து இன்று காலை 10.30 மணிக்கு இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இதையொட்டி தமிழகம், கர்நாடகாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவிரி நதிநீர் பிரச்சனையின் வரலாறு: கி.பி.1807ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமார் 85 ஆண்டுகாலம் நீடித்தன.
கி.பி.1892-ம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான முதலாவது ஒப்பந்தம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே உருவானது. இந்த ஒப்பந்தப்படி காவிரி ஆற்றின் குறுக்கே மைசூர் அரசு ஒரு அணையைப் புதிதாகக் கட்ட சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டது.
1910-ம் ஆண்டு மைசூர் அரசு கண்ணம்பாடி என்ற இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கி அணையைக் (கிருஷ்ணராஜசாகர்) கட்ட திட்டமிட்டது. ஆனால் சென்னை மாகாண அரசு அத்திட்டத்தை நிராகரித்தது. காவிரி விவகாரம் விஸ்வரூபமெடுத்த ஆண்டு இது எனலாம். அப்போதைய மத்திய அரசிடம் மைசூர் அரசு முறையிடு செய்ய கண்ணம்பாடியில் 11 டி.எம்.சிக்கு மேல் நீரைத் தேக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதியும் பெற்றது மைசூர் அரசு.
ஆனால் கர்நாடகாவோ 41.5 டி.எம்.சி.நீரைத் தேக்கும் அளவுக்கு அணையைக் கட்ட சென்னை மாகாணம் கொந்தளித்தது. இதனால் அப்போதைய மத்திய அரசு கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்தது. ஆனால் அவரால் திட்டவட்டமான தீர்ப்பைத் தர இயலவில்லை.
இதனால் சென்னை மாகாண அரசு மேல்முறையீடு செய்தது. இதனால் சென்னை மாகாண அரசு மற்றும் மைசூர் அரசுகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தைகளின் விளைவுதான் இன்று பேசப்படுகிற 1924-ம் ஆண்டு ஒப்பந்தம்.
1924-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே 2-வது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் 50 ஆண்டுகாலம்தான் என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி மைசூர் அரசு விரும்பியபடியே 41.5 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையையும் சென்னை மாகாண அரசு மேட்டூர் அணையையும் கட்டிக் கொள்ள வழியேற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் முடிவடையவதற்கு முன்பாகவே 1960கள், 1970களில் காவிரி ஆற்றின் குறுக்கே தன்னிச்சையாகவே அணைகளைக் கட்டிக் கொண்டது கர்நாடகா. 1972-ம் ஆண்டு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு அறிக்கை தந்தது. அதன் மீது தமிழகம், கர்நாடகா அரசுகள் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ஒப்பந்தம் உருவானது.
1974-ல் 1924ம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியானது. 1976-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகம், கர்நாடகா இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது என்றும் இல்லை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவே இல்லை என்றும் கூறப்படுவது உண்டு.
1986-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். காவிரி நதிநீர் விவகாரத்துக்கு தீர்வு காண நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினார்.
1990ம் ஆண்டு வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அப்போது மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. 25.6.1991-ல் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை வழங்கப்பட்டது. இந்த இடைக்கால ஆணைப்படி மேட்டூர் அணைக்கு 205 டி.எம்.சி. நீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் கர்நாடகா தமது பாசனப்பரப்பை 11.20 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா ஏற்கவில்லை. இடைக்கால ஆணைக்கு எதிராக அவசர சட்டத்தை கர்நாடகா பிறப்பிப்பது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
10.12.1991-ல் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டது. ஆனால் கர்நாடகா இதை ஏற்கவில்லை. 1997 ஆம் ஆண்டு காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முடிவுகளையும் கர்நாடகா நிராகரித்தே வந்தது.
5.2.2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டது. காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என்றும் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. நீரும் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி. நீரும் ஒதுக்கீடு செய்து இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதாவது தமிழகத்தின் உரிமையான டி.எம்.சி.யில் 227 டி.எம்.சி. நீர் தமிழக எல்லைக்குள் ஓடும் காவிரியின் கிளை நதிகளான நொய்யல், பவானி, கொள்ளிடம் ஆகியவற்றிலிருந்து காவிரியில் கலந்துவிடும். எஞ்சிய 192 டி.எம்.சி. (இடைக்கால தீர்ப்பில் 205 டி.எம்.சி.) நீரைத் தான் கர்நாடகம் தமிழகத்திற்கு தரவேண்டும். கேரளாவுக்கு 30 டி.எம்.சி. நீரும் புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் வழங்கவும் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்குகள் கடந்த 11 ஆண்டுகாலமாக விசாரிக்கப்பட்டு இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகிறது.