டெல்லி: சமஸ்கிருதத்தைவிட தமிழ்தான் பழமையான மொழி என பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் பள்ளி மாணவர்களுடனான ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோடி இவ்வாறு பேசினார்.
மோடி மேலும் கூறுகையில், உங்களில் சில மாணவர்களுடன் உங்கள் தாய் மொழியில் உரையாட முடியாததற்கு வருந்துகிறேன். நாம் பல மொழிகளை கற்க வேண்டும்.
பலருக்கும் தெரியாத ஒரு விஷயம், தமிழ்தான் மிகவும் பழமையான மொழி. சமஸ்கிருதத்தைவிடவும் தமிழ் பழமையான மொழி. அழகானதும் கூட. ஆனால் என்னால் வணக்கம் என்ற ஒரு தமிழ் வார்த்தையை மட்டுமே பேச முடிகிறது. தமிழ் கற்க முடியாததற்கு நான் வருத்தப்படுகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், மாணவர்கள் தேர்வை கண்டு அஞ்ச வேண்டாம். நான் கூட அடுத்த வருடம் தேர்தல் என்ற பெயரில் தேர்வு எழுதப்போகிறேன். இவ்வாறு மோடி தெரிவித்தார்.
இதனிடையே தமிழ்தான் பழமையான மொழி என மோடி கூறியதற்கு வட இந்தியர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் கடுப்பு வெளிப்படுத்தி வருகிறார்கள்.

























