ஆந்திர மாநில வனப்பகுதியில் கிடைக்கும் செம்மரங்களுக்கு, சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு உள்ளதால் அவற்றை சட்டவிரோதமாக வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க ஆந்திர வனத்துறையும் காவல்துறையும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களை இடைத் தரகர்கள் அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு செல்லும் தமிழர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015ம் ஆண்டு சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். செம்மரம் வெட்டி கடத்தும் எண்ணத்துடன் ஆந்திர வனப்பகுதிக்குள் நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்றும் காவல்துறை எச்சரித்தது.
இந்நிலையில், திருப்பதி அருகே ஆஞ்சேநேயபுரத்தில் லாரியில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 33 செம்மர கட்டைகளை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். லாரியில் சென்ற 13 தமிழர்கள் செம்மரம் கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
-athirvu.com