பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு, காவிரி விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா,ஜ,க தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் கறுப்புக் கொடி காட்டும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின. இதற்கான ட்விட்டர் ஹாஷ்டாகான #GoBackModi உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.
மாமல்லபுரத்துக்கு அருகில் உள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறையின் கண்காட்சி தற்போது நடைபெற்றுவருகிறது. அதனை முறைப்படி திறந்து வைக்கவும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் நரேந்திர மோதி இன்று சென்னை வந்தார்.
ஆனால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத காரணத்தால் பிரதமர் மோதிக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டுமென தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.
இன்று காலையில் பிரதமர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குவதற்கு சற்று முன்பாக, விமான நிலையத்திற்கு அருகில் உள்ள விளம்பரப் பலகை மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொண்டர்கள் ஏறி, கறுப்புக் கொடிகளைக் காட்டினர். அதன் பிறகு அவர்கள் இறக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டனர். அதேபோல, விமான நிலையத்திற்கு எதிரில் உள்ள திரிசூலம் மைதானத்தில் போராட்டம் நடத்திய தமிமுன் அன்சாரி, பெ. மணியரசன் உள்ளிட்டவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
இதேபோல கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய இயக்குனர் பாரதிராஜா, அமீர், கௌதமன் உள்ளிட்டவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
ஆலந்தூர் ரயில் நிலையத்திற்கு எதிரில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திய தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கைதுசெய்யப்பட்டார். அதேபோல கிண்டியில் போராட்டம் நடத்திய வைகோ தொண்டர்களுடன் கைதுசெய்யப்பட்டார்.
சின்னமலை அருகில் தி.மு.க.வினர் கறுப்புக்கொடிகளையும் பலூன்களையும் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தி.மு.கவினர் இல்லங்களிலும் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன. தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று கறுப்புச் சட்டையணிந்திருந்தாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மோதி திருவிடந்தையில் இருந்து ஐஐடி வளாகத்திற்குள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, அங்கிருந்து அடுத்த வளாகத்தில் உள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு காரில் செல்லும்போது ஐஐடி மாணவர்கள் சிலர் அவருக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைக் காட்டினர்.
தீக்குளித்து மரணம்
ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான தர்மலிங்கம் இன்று அதிகாலையில் தீக்குளித்து உயிரிழந்தார். அவரது வீட்டுச் சுவற்றில் மத்திய அரசு, கர்நாடக அரசுகளைக் கண்டித்தும் பிரதமர் மோதி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரைக் கண்டித்தும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
கருப்பு பலூன் பறக்கவிட்டு…
கருப்புக் கொடிப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டும் எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர்.
உலக டிரெண்டிங்
இதற்கிடையில், ‘மோதியே திரும்பிச் செல்’ என்ற பொருள்படும் #GoBackModi என்ற ஹாஷ்டாக் பலர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவுசெய்ததால், இன்று உலக அளவில் அந்த ஹாஷ்டாக் முதலிடம் பிடித்துள்ளது. -BBC_Tamil