சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய போலீஸ் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீமான் தமிழக அரசியல்வாதியும், தமிழ்த் தேசியத் தலைவர்களில் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒருவரும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று நடத்துபவர். தமிழ்த் தேசியம் குறித்து பேசி வருபவர். தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என தாரக மந்திரத்தை உரக்க வலியுறுத்தி வருபவர்.
சிவகங்கையில் பிறந்தவர்
சீமான் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையாங்குடி வட்டத்தில் அரினையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் பெற்றோர் செந்தமிழன், அன்னம்மாள் ஆவர்.
திராவிடர் கழகம்
இவர் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். சில காலம் திராவிடர் கழகத்துடன் சேர்ந்து பெரியாரின் கொள்கைகளைப் பரப்பிக்கொண்டுவந்தார்.
அரசியல் கட்சியாக
பின் நாம் தமிழர் இயக்கத்தைத் துவங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டார். சீமான் மே10, 2010 அன்று தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார்.
பல்வேறு போராட்டங்கள்
இக்கட்சி சார்பில் தனி ஈழம் அமையக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரியும் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.
பலமுறை சிறைக்கு
சீமான் இலங்கை தமிழர்களுக்காக கடுமையான போராட்டக் களத்தில் இருந்துள்ளார். மேலும், அவர் பலமுறை ஜெயிலுக்கும் சென்று வந்துள்ளார்.
சீமான் கைது
மோடியின் சென்னை வருகையை கண்டித்து போராட்டம் நடத்தியதால் இன்று கைது செய்யப்பட்ட சீமான், சென்னை பல்லாவரத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் திட்டம்
ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்தது காவல்துறை. இந்நிலையில் சீமானை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.