சென்னை: கொலை முயற்சி வழக்கில் சீமானை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இரவுவ 9 மணியளவில் அவர் விடுதலை செய்யப்பட்டார். சென்னையில் கடந்த 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, நடந்த போராட்டத்தில், போலீசாரை தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து, இன்று காலை போராட்டம் நடத்திய சீமான் கைது செய்யப்பட்டு பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
போராட்ட தலைவர்கள்
இதேபோல மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தியதற்காக இன்று கைது செய்யப்பட்ட மணியரசன், தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதமன், அமீர் ஆகியோரும் சிட்லபாக்கத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதிரடி படை
இந்த நிலையில், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தங்க வைக்கப்பட்டுள்ள பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தை சுற்றி மதியம் திடீரென அதிரடிப்படை குவிக்கப்பட்டது. மாலை 6 மணியை தாண்டியும் சீமான் விடுதலை செய்யப்படவில்லை. இதனால் சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.
தொண்டர்கள் குவிகிறார்கள்
இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. நாம் தமிழர் கட்சியினர் சீமான் கைது செய்யப்படுவதை தடுக்க முற்படுவார்கள் என்பதால் அதிரடி படை குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. மண்டபத்திற்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாததால் தொண்டர்கள் அங்கே குவிந்த வண்ணம் இருந்தனர். சீமானை விடுதலை செய்ய நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோபம்
பிரதமர் மோடி தமிழகத்தில் சாலை மார்க்கமாக தமிழகத்தில் பயணிக்க முடியாததாலும், ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இவை இரண்டுமே டெல்லியில், உள்ளோருக்கு கோபத்தை உருவாக்கியுள்ளது என்பதால்தான், எங்களை கைது செய்ய முயல்கிறார்கள் என தமிமுன் அன்சாரி தொலைபேசி வாயிலாக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இரவு 9 மணியளவில் சீமான், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல மற்றொரு மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்களும் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக 7 மணியளவில் கைதாகியிருந்த நாம் தமிழர் தொண்டர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.