உலகில் மிகவும் மோசமாக மாசுபட்ட முதல் 14 நகரங்கள், இந்தியாவிலேயே உள்ளன என, உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
வளி மாசுபடுத்தல் தொடர்பான இவ்வறிக்கை, நேற்று (02) வெளியிடப்பட்ட நிலையில், உலகின் மோசமான 14 நகரங்களும் இந்தியாவில் காணப்படுகின்றமை, இந்திய மட்டத்தில் அதிக கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 2016ஆம் ஆண்டுக்கான அறிக்கையே தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஏராளமான நகரங்கள், இந்தப் பட்டியலினுள் மோசமான மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.
குறிப்பாக, 2015ஆம் ஆண்டுக்கான தரவுகளின் அடிப்படையில், உலகில் மோசமாக மாசடைந்த 15 நகரங்களில், 6 நகரங்கள் மாத்திரமே, இந்தியாவைச் சேர்ந்தனவாக இருந்தன. ஆனால், ஒரே ஆண்டில் அவ்வெண்ணிக்கை, 14ஆக உயர்வடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, 2013ஆம் ஆண்டில், இவ்வெண்ணிக்கை 2ஆகக் காணப்பட்டமை, இந்தியாவின் வளி, எவ்வளவு விரைவான மாசடைதலைச் சந்தித்துள்ளது என்பதைக் காட்டியுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், மிகவும் மோசமாக மாசடைந்த நகரமாக, கான்பூரே காணப்புடுகிறது. வழக்கமாக, மோசமாக மாசடைந்த வளி என வரும் போது, டெல்லியே குறிப்பிடப்படுகின்ற போதிலும், அது, 6ஆவது இடத்திலேயே காணப்படுகிறது. ஃபரிடாபாத், வாரணாசி, காயா, பட்னா ஆகியன, 2 தொடக்கம் 5 வரையிலான இடங்களில் காணப்படுகின்றன.
தொடர்ந்து, லக்னோ, ஆக்ரா, முஸாஃபர்பூர், ஸ்ரீநகர், குர்கன், ஜெய்ப்பூர், பட்டியாலா, ஜோத்பூர் ஆகிய நகரங்கள் காணப்படுகின்றன.
-tamilmirror.lk