காமலாபுரம் , அழகிய பசுமையான கிராமம். சேலம் மாவட்டத்தின் விமானநிலையம் அமைந்துள்ள இப்பகுதி வருடம் முழுவதும் பசுமைக்கு குறைவில்லாமல், கண்ணிற்கு பசுமை விருந்தளிக்கும் கிராமம். காமலாபுரம் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள கிராமங்களான தும்பிபாடி,சட்டுர்,கொண்டையநூர் , குப்பூர் ,கல்றையனுர் போன்ற சுற்றியிருக்கும் பல கிராமங்களின் மக்கள் வேதனையின் உச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர் காமலாபுர கிராமமக்கள்.
வருடத்தின் முப்போகம் விளையும் நிலம், போதுமான நீர் , கால்நடைகள் வளர்ப்பு என அமைதியான வாழ்க்கை சூழலில் இருந்த இப்பகுதி மக்கள் தற்போது விவசாய நிலங்களை இழந்து நிர்கதி ஆக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தின் விமான நிலையம் மற்ற விமான நிலையங்களைவிட பல குறிப்பிடும் அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன் 4 ஆம் முறையாக (!) செயல்பாட்டிற்கு வந்துள்ள இவ்விமான நிலையம் தற்போது விரிவாக்கத்திற்கு உட்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தினரால் பத்திரிகைகள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இம்மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக கண்ணீரோடு தெரிவிக்கின்றனர் இக்கிராம குடியிருப்பு வாசிகள்.
காமலாபுரம் விமான நிலையம் , 1993- ஆம் வருடம் முதன்முறையாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. மூன்றுமுறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டாலும், நடைமுறை சிக்கல்களினாலும், மக்களின் வரவேற்பு இன்மையாலும் பலகோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு , அரசுக்கு நஷ்டத்தை தந்தது என குற்றம்சாட்டுகின்றனர் சேலத்துவாசிகள்.
4 ஆம் முறையாக மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டாலும் மிக ஒருசிலரால் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளது என்கின்றனர் பொதுமக்கள் . இந்நிலையில் நஷ்டத்தில் செல்லும் இவ்விமான நிலையத்தை மேலும் விரிவாக்கப்பணிகளுக்கு உட்படுத்துவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது மிக வேதனையில் ஆழ்த்துவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு அரசின் சார்பில் கடந்த மாதம் பத்திரிக்கைகள் மூலம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்பகுதி மக்களை சந்திக்கவோ கலந்தாலோசிக்கவோ இல்லை என குற்றம்சாட்டினர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக வாசகங்கள் அமைந்த பதாகைகளை மாட்டி சென்றவர்களை ஆட்சியர் அலுவகத்தில் காவல்துறையினர் முறையாக நடத்தவில்லை , மேலும் உயர் அதிகாரிகளை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை என்றும், அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விவசாயிகளை நடத்தியவிதம் வேதனைக்குரியது என்கின்றனர் அரசை சந்திக்க சென்ற விவசாயிகள் .
விமான நிலையத்தின் அருகில் குடியிருக்கும் விவசாய பெண்மணி, யார் வந்தாலும் பயமாக இருப்பதாகவும் , ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் கையகப்படுத்திய விமான நிலையத்துக்கான நிலத்துக்கே முறையான தொகை தரவில்லை என்கிறார்.
இப்பகுதியை விட்டு சென்ற யாரும் நல்ல நிலையில் இல்லை என்றும் பாமரமக்களையும் விவசாயிகளையும் அரசுத்துறையை சார்ந்தவர் பலவிதங்களிலும் திசைதிருப்ப முயல்கின்றனர், ஆட்சியரை பார்க்க மணிக்கணக்கில் நின்றாலும் ஆட்சியரை சந்திக்க முடியவில்லை என குற்றம்சாட்டியுள்ளார் . தங்களின் கால்நடைகளையும் விவசாயத்தையும் விட்டும், சொந்த பூமியைவிட்டும் எங்கே செல்லமுடியும் என்று கேள்வி எழுப்புகிறார்.
இளைய சமுதாயத்தினரோ அரசு பொதுமக்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதே, நிலம் கையகபடுத்தப்பட்டதற்கு சமம் என அரசு அதிகாரிகள் கூறுவது எவ்விதத்தில் நியாம் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
மூன்று போகம் விளையும் விவசாய பூமியை விட்டுத்தர விவசாயிகள் தயாராக இல்லை என்கிறார் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ்.
கிராமத்தினருடன் கண்டிப்பாக இவர்களின் எதிர்ப்பையும் பதிவு செய்வோம், ஏற்கனவே 1989 ஆம் வருடத்தில் இப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது போன்ற 25 வகையான உண்மைக்கு மாறான தகவல்களை அரசு பதிவு செய்துள்ளதாகக் கூறுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகள் இரண்டு இருக்க விவசாயத்தை ஒழித்து 30 வருடத்தில் நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையம் யாருக்காக நடத்த அரசு முயல்கிறது என கேள்வி எழுப்புகின்றனர்.
மீண்டும் இவ்வாறு அரசு உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவுசெய்து நிலம் கையகப்படுத்த முனைந்தால் கண்டிப்பாக எதிர்ப்பு வலுவாக இருக்கும் என பியூஸ் மானுஷ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத் தரப்புத் தகவல்கள் உடனடியாகக் கிடைக்கப் பெறவில்லை. -BBC_Tamil