நாகை கடலில் மூழ்கி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது.. தள்ளுமுள்ளு.. பரபரப்பு!

நாகை: நாகையில் விவசாயிகள் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்திய அரசு மே 14ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, இன்று அதிகாலை புதிய கடற்கரையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர். மேலும் கடற்பகுதியில் போலீசார் அதிகளவில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

எனினும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை, விவசாயிகள் நாகை அவுரி திடலில் பெருமளவில் திரண்டனர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என முழக்கமிட்டபடி கடலில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனால் நாகையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

tamil.oneindia.com

TAGS: