காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மதசார்பற்றது) ஆகிய கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டதாக கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராக பதவி ஏற்ற பின்பு, முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கூறினார்.
கர்நாடக மக்களுக்கு தாம் நன்றிக்கடன்பட்டிருப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர் எடியூரப்பா, தாம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடகாவில் ஒரு லட்சம் வரையிலான விவசாயக் கடனை எடியூரப்பா தலைமையிலான அரசு தள்ளுபடி செய்துள்ளது. பெங்களூருவில் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் எடியூரப்பா இது தொடர்பாக கையெழுத்திட்டுள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். -BBC_Tamil