100 நாட்கள் அறவழியில் நடந்த போராட்டத்தை கொலை செய்து தீவிரப்படுத்தியிருக்கிறது அரசு: வேல்முருகன்

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் போராடிய மக்களை, துப்பாக்கிச்சூடு நடத்தி தமிழக அரசு ஒடுக்க நினைக்கிறது. ஆனால், இனிமேல் தான் இந்தப் போராட்டம் திவீரமடையும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்று வந்த போராட்டத்தின் 100வது நாளில் அறவழியில் பேரணி செல்வதற்காகக் கூடிய மக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள், போலீஸார் மீது கல்வீசித் தாக்கினர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் சூறையாடினர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறுகையில், 99 நாட்கள் மக்கள் அறவழியிலும், ஜனநாயக முறையிலும் போராடி வந்தனர். போராட்டத்தின் நூறாவது நாளையொட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க அனுமதி கேட்டவர்களுக்கு தடை விதித்தது காவல்துறை.

மேலும் தடையை மீறி அமைதியாகப் பேரணி வந்தவர்களை மாவட்ட ஆட்சியரை சந்திக்க விடாமல், விரட்டுவதற்காக காவல்துறை கையாண்ட இந்த முடிவு தூத்துக்குடியையே போர்க்களமாக்கி இருக்கிறது.

அநியாயமாக துப்பாக்கிச்சூட்டில் இரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டுள்ளது. இந்தப் படுகொலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. மேலும் இதற்குக் காரணமாக இருந்த காவலர், மாவட்ட கண்காணிப்பாளர், தென் மண்டல காவல்துறை தலைவர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

லண்டனில் இருக்கும் வேதாந்தா குழுமத்தின் முதலாளிகளுக்காக, தன் சொந்த மக்களையே கொல்லும் அரசு தமிழகத்தில் தான் இருக்கிறது. இதற்கு விரைவில் ஒரு முடிவு கட்டப்படும். விரைவில் இந்தப் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: