சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 10 உயிர்களை பலிவாங்கி இருக்கிறது சர்வாதிகார அரசு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் 100வது நாளையொட்டி, மாவட்ட ஆட்சியரிடம் பேரணியாகச் சென்று மனுக்கொடுக்கச் சென்ற பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில், மிகப்பெரிய வன்முறை வெடித்தது.
இதில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், 10 பேர் பலியாகி உள்ளனர்.இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பல்வேறுகட்ட போராட்டம்
தூத்துக்குடி பகுதி மக்களின் உடல்நலனுக்கும் அப்பகுதி நிலத்தின் சுற்றுப்புற சூழலுக்கும் பெரும் கேட்டினை பிழைத்து வருகிற ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் பல்வேறு கட்டங்களாக போராடி வருகிறார்கள். கடந்த நூறு நாட்களாக தொடர்ச்சியான போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வரும் சூழலில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுகின்ற போராட்டத்தை அறிவித்து இருந்தார்கள்.
10 பேர் பலி
மக்களின் போராட்டத்தை தனது அதிகார பலம் கொண்டு அடக்கி விடலாம் என்ற தனது சர்வாதிகார மனப்பாங்கு மூலம் நினைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி அரசிற்கு தனது ஒற்றுமையான கடுமையான போராட்டத்தின் மூலமாக அம்மக்கள் தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள வக்கற்ற தமிழக அரசும் அதன் காவல்துறையும் சனநாயக முறையில் போராடிய மக்கள் மீது கடும் வன்முறையை ஏவி 10 உயிர்களை கொலை செய்திருக்கிறது.
மக்கள் மறுமொழி
இன்னும் பலர் உயிருக்கு ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வருகின்ற செய்திகள் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கொதி நிலைக்கு உள்ளாகி இருக்கிறது. இன்று நடந்த உயிர் அந்த உயிர் பணிகளுக்கும் அங்கு காயம்பட்டவர்களின் அவல நிலைகளுக்கும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். மக்கள் போராட்டத்தை தனது அரசதிகாரம் கொண்டு அடக்கி ஒடுக்கி விடலாம் என்கின்ற தமிழக அரசின் சர்வாதிகார மனநிலைக்கு தமிழக மக்கள் தங்களது போராட்ட பதிலடியால் தக்க மறுமொழி அளிப்பார்கள்.மத்தியிலே ஆண்டு கொண்டிருக்கிற மோடி அரசுக்கு பினாமி அரசாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு தனியார் நிறுவனமான ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு தனது விசுவாசத்தை காட்டுவதற்காக இன்று எட்டு உயிரை காவு வாங்கி இருப்பது எதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது .
காட்டுமிராண்டித்தனமான வன்முறை
தமிழகத்திலேயே பல்வேறு காரணங்களுக்காக தொடர்ச்சியாக தன்னெழுச்சியாக நடந்து வரும் மக்கள் போராட்டங்களை காவல்துறையை வைத்து அடக்க நினைப்பதும் பொய் வழக்குகள் போட்டு தக்க நினைப்பதும் தமிழக அரசின் பாசிச குண இயல்புகளை காட்டுகிறது. எந்த மக்கள் போராட்டத்திற்கு தீர்வு காண முடியாத தமிழக அரசு தனது அதிகாரத்தின் மூலமாக இவ்வாறு மக்கள் மீது வன்முறையை காட்டுமிராண்டித்தனமானது. சகித்துக் கொள்ள முடியாது. தமிழக அரசின் சர்வாதிகார இந் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.