பெங்களூர்: தூத்துக்குடியில் துப்பாக்கி சூடுக்கு அடிப்படை காரணமாக உள்ள வேதாந்தா குழுமத்தின் பெங்களூர் அலுவலகம் இன்று முற்றுகையிடப்பட்டது.
வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தூத்துக்குடியில் இயங்கி வருகிறது. அதன் விரிவாக்க பணிகளுக்கு அனுமதி வழங்க கூடாது என்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் சுட்டு 13 அப்பாவிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதை கண்டித்து, இடதுசாரி தொழிற்சங்கமான AITUC உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், கன்னட அமைப்புகளும் இணைந்து பெங்களூரில் உள்ள வேதாந்தா கார்பொரேட் அலுவலகம் எதிரே தர்ணாவில் ஈடுபட்டனர்.
கன்னடத்தில் உருக்கம்
கன்னடத்தில் உரை நிகழ்த்தி தூத்துக்குடியில் நடந்த சம்பவம் குறித்து கன்னட அமைப்பினர் உருக்கமாக விவரித்தனர். தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் தொடர்பாக ‘ஒன்இந்தியா தமிழ்’ வெளியிட்ட கார்ட்டூன் படம் உள்ளிட்ட பல்வேறு கார்டூன் படங்களை பதாகைகளை போல போராட்டக்காரர்கள், கைகளில் ஏந்தியிருந்தனர்.
கலெக்டரை கைது செய்
“கொலைகார போலீசாரை கைது செய், மாவட்ட கலெக்டரை கைது செய்.. தமிழக முதல்வரே பதவி விலகுங்கள்” என ஆங்கிலத்திலும், தமிழ், கன்னட மொழிகளிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
முற்றுகை
இதுகுறித்து இடதுசாரி தொழிற்சங்கமான AITUCயின் கர்நாடக மாநில பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான பாலன் ‘ஒன்இந்தியா தமிழ்’ இணையதளத்திடம் கூறுகையில், 13 தமிழர்களைக் கொன்று குவித்த வேதாந்தா, பெங்களூரு நிறுவனம் முற்றுகையிடப்படுகிறது. வேதாந்தாவின் கொள்ளைக்காக அடியாள் படையாக செயல்பட்டு 13 பேரைப் பச்சைப்படுகொலை செய்த கொடுஞ் செயலைக் கண்டித்து பெங்களூரில் வேதாந்தா நிறுவனத்தை முற்றுகையிடுகிறோம் என்றார்.
மன்னிப்பு தேவை
போராட்டத்தில் பங்கேற்ற நரசிம்மா என்பவர் கூறுகையில், தூத்துக்குடி சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு, வேதாந்தா நிறுவனம் மன்னிப்பு கடிதம் எழுதி தரும் வரை இங்கேயிருந்து நகர மாட்டோம் என்றார்.