சென்னை: தூத்துக்குடிப் படுகொலைகள் பல அபாயகரமான கேள்விகளை எழுப்பாமல் இல்லை. புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் போன்ற இயக்கங்கள், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி என குறிப்பிட்டுச் சொல்லும்படியானவர்கள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு அரசியல் கட்சியினருமே இக்கோர துப்பாக்கிச் சூட்டில் பாதிக்காமல் தப்பியது எப்படி என்பது ஆகப் பெரும் கேள்வி.
தூத்துக்குடிப் படுகொலைகளின் பின்னால் மாபெரும் சதி இருக்கிறதோ என்கிற சந்தேகத்தை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 3 மாதங்களாக பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அந்த மக்களைச் சந்திக்க முடியாத நிலைதான் இருந்தது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் பிரதான அரசியல் கட்சிகள் மீது மக்கள் கடும் கோபத்தில்தான் இருந்தனர். அதனால்தான் சிறு சிறு இயக்கங்கள், கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் அங்கே வந்து ஆதரவு தெரிவிக்க அவர்கள் அனுமதித்தனர்.
கட்சிகள் மீது விமர்சனங்கள்
ஆனால் பிரதான கட்சியினரை உள்ளேவிடாமலேயே விமர்சனங்களை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். ஸ்டெர்லைட்டை முன்வைத்து பிரதான கட்சிகள் மீது மக்களுக்கு சந்தேகமும் இருந்தது.
மேம்போக்கான நடிப்பு
ஸ்டெர்லைட்டிடம் தூத்துக்குடி அரசியல் பிரமுகர்கள் பெற்ற ஆதாயங்கள் போராட்ட களத்தில் மக்களின் பேசுபொருளாகவும் இருந்ததை மறுக்க முடியாது. இந்த நிலையில் மேம்போக்காக மக்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என பசப்பு வார்த்தைகளைத்தான் இந்த அரசியல் கட்சிகள் தெரிவித்தும் வந்தனர்.
திட்டமிட்டே படுகொலை
மேலும் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இந்த போராட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வரக்கூடாது என தடுக்கின்றனர் என்றும் பகிரங்கமாக பொதுவெளிகளில் ஊடகங்களிலும் பேசப்பட்டது. இந்த நிலையில் உச்சகட்டமாக 100-வது நாள் தன்னெழுச்சிப் புரட்சியில் திட்டமிட்ட வகையில் பலர் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.
இயக்க நிர்வாகிகள் இலக்கா?
போராட்டத்துக்கு முதல் நாள் 65 பேரை இலக்கு வைத்து போலீஸ் தேடியது.. இதில் 10 பேர் மட்டுமே சிக்கினார்கள் என்பது அப்பகுதி ஊடகத்தார் அவர்களது ஊடகங்களில் சொன்ன செய்தி. இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்களில் புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழரசன், மக்கள் அதிகாரம் ஜெயராமன் இருவரும் அடக்கம். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்திருக்கிறார்.
தப்பிய அரசியல் கட்சிகள் நிர்வாகிகள்
ஆனால் பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர் அல்லது போலீசாரின் பாதுகாவலில் இருந்திருக்கின்றனர். அப்படியெனில் போராட்டக்காரர்கள் மீதான வன்மங்களைத் தீர்க்க கட்சிகளும் அரசும் போலீஸும் இணைந்து திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டை நடத்தியதா? என்கிற கேள்வி இப்போது விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.
அரசியல்வாதிகளின் கள்ளக் கூட்டு?
மக்கள் தன்னெழுச்சி போராட்டங்களை ஆதாயமாக்கிக் கொண்டு அரசியல் அறுவடை செய்ய திராணியற்றவர்களும் அதிகார வர்க்கத்துடன் இப்படுகொலையில் கை கோர்த்து உள்ளனரா? அரசியலில் போணியாகவே முடியாதவர்களுக்கு மக்களின் போராட்டங்கள் எரிச்சலைத்தான் தரும்.. ஆதாய அரசியல் மட்டுமே போதும்… கொள்கை கோட்பாடு நாடகமெல்லாம் நமக்கு மட்டும் தெரியும் என்கிற மமதையில் இருக்கும் அந்த அரசியல்வாதிகளின் கள்ளக் கூட்டில்தான் இந்த ‘இனப்படுகொலை’ நிகழ்த்தப்பட்டதா?