தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை தமிழக அரசும் விரும்பவில்லை எனவேதான் ஆலைக்கு தேவையான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை தமிழக அரசும் விரும்பவில்லை எனவேதான் ஆலைக்கு தேவையான மின்சாரம், தண்ணீர் ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற மக்களின் முக்கிய கோரிக்கையை அரசு கருத்தில் கொண்டுள்ளது எனவே மீண்டும் இயல்புநிலை திரும்ப மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும், கலவரங்கள் ஏற்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
இதுவரை 65 பேர் போலிஸார் பிடியில் இருப்பதாகவும், 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இதுவரை 102 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 19 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் போலிஸ் தரப்பில் 34 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
-BBC_Tamil