தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம்.. ஹைகோர்ட் உத்தரவு!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், தூத்துக்குடி சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட தமிழக அரசுக்கு மனு அளித்தேன். அதை தமிழக அரசு இன்னும் ஏற்கவில்லை. எனவே சிபிஐ விசாரணை நடத்த, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று வழக்கை விசாரித்தபோது, சூர்யபிரகாசம் வாதிட்டு, “போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டை முதல்வரே நியாயப்படுத்தி நேற்று பேட்டியளித்துள்ளார். எனவே, தமிழக அரசு விசாரித்தால் உண்மை வெளியே வராது. சிபிஐ விசாரணைதான் தேவை” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஹைகோர்ட், இந்த பிரச்சினை குறித்து சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: