”யே நாம தூத்துக்குடில இருக்கோமா? காஷ்மீர்ல இருக்கமோலே?”
தூத்துக்குடியில் மே22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போரட்டத்தை அடுத்து அரங்கேறிய வன்முறையை ஒடுக்குவதற்காக குவிக்கப்பட்ட காக்கிப்படை இன்னும் நகரின் தெருக்களில் நிறைந்திருக்க, பாதிக்கப்பட்ட உள்ளுர்வாசிகள் பலரும் காஷ்மீரில் இருப்பதுபோல தோன்றுவதாக கூறும் உரையாடல் அது.
அண்ணா நகர், குமரரெட்டியாபுரம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வெளியியே வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் மாவட்ட நிர்வாகம் காவல்துறையினரின் எண்ணிக்கை குறைக்காமல் இருப்பதால், பதட்டம் இன்னும் நீடிப்பதுபோலவே தோற்றம் அளிக்கிறது என சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
மளிகை கடை, டீ கடை, பேருந்து நிருத்தம் என எல்லா இடங்களிலும் காவல்துறையினர் இருப்பதால் மக்களுக்கு மேலும் அச்சம் ஏற்படுகிறது என்கிறார் இல்லத்தரசி சரோஜா.
”நான் போராட்டத்தில் கலந்துகொண்டேன். ஆனால் இவ்வளவு வன்முறை நடக்கும் என்று தெரியாது. பெரும் இழப்பை சந்தித்த மக்கள், தினசரி வாழ்க்கைக்குச் செல்லவேண்டும் என்றால் குறைந்தபட்சம் தடை உத்தரவை நீக்கவேண்டும். வயதானவர்கள் பலர் கடைகளுக்கு சென்றுவர யோசிக்கிறார்கள். காஷ்மீரில் எல்லா தெருக்களிலும் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் இருப்பதை செய்தியில் பார்த்திருக்கிறோம். அதேபோல எங்கள் ஊரில் காவல்துறையினர் குவித்திருப்பது எங்களை மீளாத அச்சத்தில் வைத்திருகிறது. காஷ்மீரில் இருப்பதுபோல உள்ளது,” என்கிறார் சரோஜா.
அவர் மேலும் அண்ணா நகர் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு நடத்திவருவது கண்டிக்கத்தக்கது என்றார்.
நான்கு நாட்களாக தனது உறவினர் உதவியுடன் இரண்டு மகன்களும் எந்த போலீஸ் நிலையத்தில் இருகிறார்கள் என்று தேடிவருவதாக கூறுகிறார் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
”அமைதி திரும்புதுனு சொல்லுதாங்க. இங்க எங்க புள்ளைவலுவ எந்த ஸ்டேஷன்ல இருக்குதாங்கனு தெரியல்லையம்மா. வீட்டுல டிவி பாத்திட்டு இருந்த இரண்டு பசங்களையும் கூட்டிப்போய்ட்டாங்க. எங்க தெரு பூரா போலீஸ்காரங்க. எப்படிமா நாங்க நிம்மதியா இருப்போம்,” என்கிறார் வசந்தி.
”மூத்த மகனுக்கு மெட்ராஸ்ல வேலை கிடைச்சு, போராட்டத்துக்கு அடுத்த நாள் கிளம்பிபோலானு இருந்தான். அதனால போரட்டம் நடக்கும்போது ரோட்டுக்குகூட போகல,” என்கிறார் வசந்தி.
வசந்தியின் மகன்களைப் போல பலரை சந்தேகத்தின் பேரில், குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்காமல் காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக கூறுகிறார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன்.
”பல இளைஞர்களை எந்தவித காரணமும் சொல்லாமல் கைது செய்துள்ளார்கள். அவர்களின் குடும்பத்திற்கு தகவல் கொடுத்து, அவர்களை சந்திக்கவும், ஜாமீனில் எடுக்கவும் அனுமதிக்கவேண்டும். காவல்துறையினரின் கண்காணிப்பில் அமைதி திரும்பாது. இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் வரவேண்டும் என்றால் முதலில் போலீசாரை திருப்பி அனுப்பவேண்டும். தடை உத்தரவை திரும்பப் பெறவேண்டும். இணைய வசதி அளிக்கப்படவேண்டும்,” என்றார் ஹென்றி.
மேலும் மே22ம் தேதி போராட்டத்தை காவல்துறை கட்டுப்படுத்த எடுத்த நடைமுறைகளில் பல சட்டவிதிமீறல்கள் நடந்துள்ளன என்கிறார் ஹென்றி. ”எந்த அறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுமக்கள். அவர்களை துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கி அமைதியை கொண்டுவரமுடியுமா? இந்த விதிமுறை மீறல்களை விசாரிப்பதற்கு ஆணையம் கொண்டு வந்துவிட்டார்கள். இதுவரை அரசாங்கம் அமைத்த ஆணையங்கள் அரசுக்கு சாதகமாகவே அறிக்கைகளை வெளியிட்டுள்ளன என்பதால் இந்த ஆணையம் குறித்தும் முழுசந்தேகம் உள்ளது,” என்றார் ஹென்றி.
மே22 போராட்டத்திற்கு பிறகு, புதிதாக பதவியேற்ற மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மக்கள் இயல்பு வாழக்கைக்கு திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். ”பொது இடங்களில் அமைதி திரும்ப எல்லா முயற்சிகளையும் செய்துவருகிறோம். காய்கறி மார்கெட் இயங்குகிறது. எல்லா பேருந்துகள், தனியார் வாகனங்கள் செல்ல தடைஇல்லை. பொதுமக்களின் வாழ்க்கைக்கு இடையூறு இல்லாமல் எங்கும் சென்றுவரலாம். மீனவ அமைப்புகள், வங்கி ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் பேசியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.
ஆனால் தூத்துக்குடியில் அமைதி திரும்ப மேலும் இரண்டு நாட்கள் தேவை என்று கூறியுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல இளைஞர்களை விடுவிப்பது குறித்து கேட்டபோது காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, ”இதுவரை 75 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 65வழக்குகள் பதிவாகியுள்ளன. சட்டத்திற்கு புறம்பான முறையில் யாரையும் கைது செய்யவில்லை. கைது செய்த எல்லோருக்கும் வழக்கறிஞர்கள் வருகிறார்கள். நீதிபதி முன்பாக ஆஜர் செய்கிறோம். பதற்றம் நிலவும் இடங்களில் மட்டுமே காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அமைதி திரும்பினால், எல்லா இடங்களிலும் காவலர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்,” என்றார். மேலும் இரவு நேரங்களில் மின்சாரத்தை நிறுத்தி கைதுகள் நடைபெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை முரளி ரம்பா மறுத்துள்ளார். -BBC_Tamil