ஸ்டெர்லைட்: தமிழகத்தில் வெற்றி பெற்ற 3 சூழலியல் போராட்டங்கள்

கடந்த வாரம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

சூழலியல் மாசடைகிறது. அதனால், தங்கள் வாழ்வாதராம் கேள்வி குறியாகிறது என்பதுதான் ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் முன்வைத்த காரணங்கள்.

மக்கள் போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டுள்ளது.

செயற்பாட்டாளர்கள் அரசின் இந்த முடிவினை வரவேற்றாலும், இதனை அவர்கள் தற்காலிக வெற்றியாகவே கருதுகிறார்கள். அரசின் கொள்கை முடிவில் மாற்றம் வர வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை.

சரி… சுழலியலுக்கான தமிழகத்தில் நடைபெற்ற மாபெரும் முதல் போராட்டம் இதுதானா? என்றால் ‘இல்லை’ என்பதுதான் பதில்.

சமகாலத்திலேயே கல்பாக்கம், நெடுவாசல், கதிராமங்கலம், இனயம் என மாவட்டத்திற்கு ஒரு போராட்டம் நடந்து வருகிறது. இவற்றில் பெரும்பாலானவை சூழலியல் சார்ந்த போராட்டங்கள்தான்.

ஸ்டெர்லைட்

சமகாலத்தில் மட்டும் அல்ல, வரலாற்றின் பக்கங்களை கொஞ்சம் புரட்டினால் சூழலியலுக்கான பல வீரியமான போராட்டங்களை நம் மக்கள் முன்னெடுத்து இருப்பதும், அந்த போராட்டங்களில் மக்கள் வெற்றி பெற்று இருப்பதும் தெரிகிறது.

அப்படியான 3 போராட்டங்களை இங்கு தொகுத்து இருக்கிறோம்.

அமைதிப் பள்ளத்தாக்கு போராட்டம் (Silent Valley Struggle):

உலகம் முழுவதும் மக்களுக்கான போராட்டங்களில் எப்போதும் கலைஞர்கள் முதல் வரிசையில் நின்று இருக்கிறார்கள். போராட்டத்திற்கான வினைஊக்கியாகவும் அவர்கள் இருக்கிறார்கள். இப்போதும் கூட தமிழகத்தில் நடக்கும் பல போராட்டங்களில் முன் நிற்பது கலைஞர்கள்தான்.

தமிழகத்தில் வெற்றி பெற்ற 3 சூழலியல் போராட்டங்கள்

அப்படியான ஒரு கலைஞர்தான் அமைதிப் பள்ளத்தாக்கு போராட்டத்தையும் முன்னெடுத்து இருக்கிறார்.

அடர் வனமான அமைதிப் பள்ளத்தாக்கில் வழிந்தோடும் நீர் நிலைகளுக்கு மத்தியில் ஒரு பெரும் அணையை கட்டி மின்சாரம் தயாரிக்க 1973 ஆம் ஆண்டு கேரள அரசு ஒரு திட்டத்தை முன்மொழிகிறது.

குந்தா, பவானி, சிறுவாணி போன்ற ஆறுகளின் தாய்மடியாக இருந்து, பல லட்ச உயிரினங்களின் வாழ்விடமாக இருப்பது அமைதிப் பள்ளத்தாக்குதான்.

பல அரிய உயிரினங்களின் கூடாக இருக்கும் அந்த அடர் வனம், இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பை முதலில் பதிவு செய்கிறார் கிண்டி பாம்பு பண்ணையை உருவாக்கிய ரோமுலஸ் விட்டேகர்.

கேரள அறிவுஜீவிகள் இந்த திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட களத்திற்கு வருகிறார்கள். அப்போது சுகந்தகுமாரி என்னும் மலையாள கவிஞர், ‘மரத்தின்னு சுதிதி’ என்று துவங்கும் கவிதையை எழுதுகிறார்.இந்த கவிதை, போராட்டகாரர்களின் தேசிய கீதம் ஆகிறது.

ஏறத்தாழ 12 ஆண்டுகள் இந்த போராட்டம் நீள்கிறது. இறுதியில் மக்களுக்கு வெற்றி கிடைக்கிறது.

எளிய மக்கள் முன்னெடுத்த போராட்டத்தால் தென்னிந்தியாவில் மிஞ்சி இருக்கும் ஒரே சோலைக்காடான அமைதிப்பள்ளத்தாக்கில் அந்த அணை திட்டத்தில் இருந்து தப்புகிறது.

விஸ்கோஸ் போராட்டம்:

நீர்நிலையை காக்க தென்னிந்தியாவில் நடந்த முதல் போராட்டம் விஸ்கோஸ் ஆலைக்கு எதிரான போராட்டம்தான். அது மிக நீண்டதொரு போராட்டமும் கூட.

சமகாலத்தோடு ஒப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்திற்கும் விஸ்கோஸ் போராட்டத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு.

கோவையில் அதிகமாக மில்கள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. அதே சமயத்தில் பருத்தி நூலிழை தட்டுபாடும் மிகப்பெரிய அளவில் ஏற்படுகிறது.

இந்த பருத்தி நூலிழை தட்டுப்பாட்டை போக்க, மேட்டுப்பாளையம் அருகே, சிறுமுகை பவானி ஆற்றின் கரையில் ரேயான் செயற்கை பட்டு இழை உற்பத்திக்காக ‘சவுத் இந்தியா விஸ்கோஸ்’ என்ற பெயரில், சுமார் 300 ஏக்கரில் மிகப் பெரிய தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.

ஸ்டெர்லைட்

உற்பத்தியை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அதற்கு எதிர்ப்பும் ஏற்பட தொடங்குகிறது.

சில தசாப்தங்களில் இந்த நிறுவனம் வட இந்தியாவை சேர்ந்த வேறு பெருநிறுவனத்தின் கைக்கு மாறுகிறது. உற்பத்தியும் அதிகரிக்கிறது.

இந்த ஆலை கழிவு நீரை முறையாக சுத்திகரிக்கப்படாமல் பவானி ஆற்றில் விடுகிறது. இதனால் ஆறு மாசடைகிறது என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டி, 90-களில் விவசாயிகள் போராட தொடங்குகின்றனர். பின்பு அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கின்றனர்.

முதலில் இந்த போராட்டம் குறித்து எதுவும் பேசாமல் இருந்த நிறுவனம், மக்கள் கொடுத்த அழுத்தங்களுக்கு பின் கொஞ்சம் இறங்கி வருகிறது.

‘கழிவு நீரை முழுவதுமாக சுத்திகரித்து விடுகிறோம்’ என்றது. ஆனால், அந்த நிறுவனம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று மக்கள் வீரியமான போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.

ஏறத்தாழ பத்து ஆண்டு போராட்டத்தின் விளைவாக, 2000 ம் ஆண்டு அந்த ஆலை முழுவதுமாக மூடப்படுகிறது.

கஞ்சமலை – கவுத்தி வேடியப்பன் மலை போராட்டம்:

ஸ்டெர்லைட்

சேலம் மாவட்டம் கஞ்சமலையில், இரும்பு கனிமங்களை வெட்டி எடுக்க ஜிண்டால் நிறுவனம் முயற்சிக்கிறது.

அதற்கான அனைத்து அனுமதிகளையும் பொய் தகவல்கள் அளித்து வாங்கியதாக மக்களும் செயற்பாட்டளர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் ஏறத்தாழ 90,000 மரங்கள் வெட்டப்படும் என்பது அவர் கவலை.

கஞ்சமலை பல அரியவகை மூலிகைகள் இருக்கும் சிறிய மலை பகுதி. இது அழிக்கப்பட்டால் அந்த பகுதியின் சூழல் கெடும் என்கின்றனர் பொதுமக்கள்.

மக்கள் இணைந்து கஞ்சமலை பாதுகாப்புக் குழு என்ற அமைப்பை கட்டமைக்கின்றனர்.

ஒரு நீண்ட போராட்டத்தின் விளைவாக ஜிண்டால் இங்கிருந்து பின்வாங்கி திருவண்ணாமலை கவுத்தி- வேடியப்பன் மலைக்கு ஓடுகிறது. அங்கும் மக்கள் அதை எதிர்க்கின்றனர்.

மக்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் தற்காலிகமாக இரும்பு கனிமங்களை வெட்டி எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. -BBC_Tamil

TAGS: