தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரில் 7 பேரின் உடல்களை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மறு உடற்கூறாய்வு செய்யப்பட்ட இருவரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மூன்று பேரது உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவுபடி, ஜிப்மர், ஸ்டான்லி மற்றும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழு, மறு உடற்கூறாய்வை மேற்கொண்டது. ஜிம்பர் மருத்துவர் பத்ரா தலைமையில் இது நடத்தப்பட்டது.
மாசிலாமணி நகரை சேர்ந்த சண்முகம் மற்றும் சாயற்புரத்தை சேர்ந்த செல்வசேகர் ஆகியோரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, பாதுகாப்பு நலன் கருதி ஆளில்லா விமானம் ஒன்று பறக்கவிடப்பட்டு, 2 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டார பகுதிகளை அது கண்காணித்த பின்னரே உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், ஸ்னோலின், தமிழரசன், காளியப்பன் ஆகியோரது உடல்களை வாங்க அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை அகற்றி, அந்த இடத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத் தூண் கட்ட வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்த யார் அனுமதி அளித்தார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, டி.எஸ்.பி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது வெறும் கண்துடைப்புதான் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
“நீதிமன்ற உத்தரவு இருந்தாலும், முறையாக உடற்கூறாய்வு நடைபெறுகிறதா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது” என்று அவர்கள் கூறினர்.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அளவிற்கு அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். -BBC_Tamil