கும்பகோணம்: குஜராத்திலிருந்து மீட்கப்பட்ட தஞ்சை ராஜராஜசோழன், உலகமாதேவி சிலைகள், இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. சிலைகளை தஞ்சை பெரிய கோயிலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தஞ்சை பெரியகோயிலிலிருந்து 60 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜசோழன், உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் காணாமல்போனதாக கூறப்பட்டது. இவைகள், குஜராத் சராபாய் பவுண்டேஷன் – காலிகோ அருங்காட்சியகத்தில் இருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் குஜராத் சென்று, பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் கொண்டு வந்தனர். அப்போது, சிலைகளுக்கு பொதுமக்கள் மேளதாளம் முழங்கி, மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.
பின்னர், இந்த சிலைகள் கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டன. இந்த 2 சிலைகளையும் தஞ்சை பெரிய கோயிலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை பக்தர்கள் வரவேற்றுள்ளனர். பெருவுடையார் இனி தஞ்சை மாவட்டத்திலே பஞ்சம் நீக்கி அருள்பாலிப்பார் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் முன்னர், சிலைகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதனால் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.