சென்னை: தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் மூன்று நிறுவனங்களுக்கு ‘நீரா’ பானம் உற்பத்தி செய்யும் உரிமையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.
தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், அவர்களது வருமானத்தை உயர்த்த தென்னம்பாளையிலிருந்து ‘நீரா’ பானத்தை இறக்கவும், அதனை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் வகையில், ‘தமிழ்நாடு நீரா விதிகள், 2017’ என்பதை வடிவமைத்து, அறிவிக்கை செய்துள்ளது.
நீரா பானத்திலிருந்து, நீரா வெல்லம், நீரா பாகு, நீரா சர்க்கரை, நீரா சாக்லெட்கள், நீரா கூழ், நீரா கேக் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்கவும், விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும் இதனால் வழி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்திடம் பதிவு செய்து தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் நீரா பானத்தையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்ய முடியும். பிறருக்கு அனுமதி இல்லை.
கோவை மாவட்டத்திலுள்ள விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், கோவை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களுக்கு, நீரா பானம் உற்பத்தி செய்யவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உரிமங்களை முதல்கட்டமாக முதல்வர் நேற்று வழங்கினார்.
தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களில் உள்ள விவசாயிகளுக்கு நீரா வடிப்பது தொடர்பாகவும், நீரா பானத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு பயிற்சிகள் வழங்க உள்ளது.
இதேபோல பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீர், அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கருப்புகட்டி உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்களுக்கு தமிழக அரசு ஊக்கம் தர வேண்டும் என்பது, ஏழை, எளிய விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.