ஆட்டிப் படைக்கும் நிபா வைரஸ்.. டாக்டர்கள், நர்சுகளை கூட லீவில் போகச்சொன்ன கேரள அதிகாரிகள்

திருவனந்தபுரம்: நிபா வைரஸ் அச்சம் காரணமாக பலாச்சேரியில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்களை விடுப்பில் செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளத்தில் வேகமாக பரவி வருகிறது நிபா வைரஸ். இந்த வைரஸ் வௌவாலில் இருந்து பரவுகிறது. அந்த உயிரினம் உட்கார்த பழத்தை மனிதர்கள் சாப்பிடும் போது அவர்களுக்கு பரவுகிறது.

இந்த வைரஸ் காய்ச்சலால் கேரளத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். பலாச்சேரி மருத்துவமனையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டனர்.

இதையடுத்து பாதுகாப்பு அம்சங்களுக்காக நிபா வைரஸ் பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் 4 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை விடுப்பில் செல்லுமாறு மூத்த சுகாதார துறை அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இவர்களுக்கு பதில் மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நிபா வைரஸ் குறித்து மாவட்டத்தில் உள்ள நிலை குறித்து கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் யூவி ஜோஸ் கேரளா நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். அந்த அறிக்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படவில்லை. அதற்கு பதிலாக வரும் ஜூன் 5-ஆம் தேதி திறக்கப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: