ஜம்மு, ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதலை தொடர்ந்து வருகிறது. எல்லையில் அமைதியின்மை நேரிட்ட நிலையில் கடந்த வாரம் இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை நடைபெற்ற போது போர் நிறுத்தத்தை கொண்டுவருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் அதற்கு மதிப்பளிக்காது பார்க்வால் செக்டாரில் கடுமையான துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளது. இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்த அடாவடி தாக்குதலில் இந்திய வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். எல்லைக் கிராமத்தை சேர்ந்த 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
இதுதொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “பார்க்வால் செக்டாரில் பாகிஸ்தான் படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று காலையில் மோட்டார் ஆயுதங்களை கொண்டு தாக்குதலை நடத்தியது, இதில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதியில் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டது.” என்றார். பார்க்வால் செக்டார் 10 எல்லை போஸ்ட்களை கொண்டது, அங்கு 35 கிராமங்கள் உள்ளது. இந்திய ராணுவமும் சரியான பதிலடியை கொடுத்தது, இதனால் பாகிஸ்தானுக்கும் பெருமளவு சேதம் ஏற்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு மாவட்டம் கான்காசாக் செக்டாரிலும் பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி தாக்குதல் நடத்தியது எனவும் அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது. அங்கு நடத்த துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர், அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறிய தாக்குதலை தொடங்கியது, போலீஸ் உஷார் படுத்தப்பட்டது. பொதுமக்கள் பத்திரமான இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டது, பொதுமக்கள் பதுங்கு குழியில் தங்க வைக்கப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்தி பேசுகையில், “துரதிஷ்டவசமான சம்பவம் நடைபெற்று உள்ளது, இருநாட்டு டிஜிஎம்ஒக்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னரும் இது நடந்து உள்ளது, இருதரப்பு மக்களும் உயிரிழந்து வருகிறார்கள். இருதரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற வேண்டும், இந்த ரத்தம் சிந்தும் சம்பவத்திற்கு முடிவுகட்ட வேண்டும்,” என கூறிஉள்ளார். கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியாக தாகுதலில் ஈடுபட்டது. பொதுமக்களில் 12 பேர் கொல்லப்பட்டனர், இரண்டு பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது, ஆனால் பாகிஸ்தான் அதனை மதிக்கவில்லை.
பேச்சுவார்த்தையை அடுத்தும் அடாவடியான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளநிலையில், பாகிஸ்தானை நம்ப முடியாது என்பது உறுதியாகி உள்ளது என எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
எல்லைப் பாதுகாப்பு படை ஐஜி ராம் அவ்தார் பேசுகையில், “பாகிஸ்தான் ஒருபோதும் அதனுடைய வார்த்தையை காப்பாற்றியது கிடையாது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இருதரப்பு இடையிலான பேச்சுவார்த்தையின் போது போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது, அதற்கு நம்பிக்கையாக பாகிஸ்தான் இருக்கவில்லை, எல்லையில் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டு உள்ளது,” என்று கூறிஉள்ளார். இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடியை கொடுத்தது, எல்லையில் இதுவரையில் சேதம் தொடர்பாக மதிப்பிடவில்லை. நாங்கள் பொதுமக்கள் வசிக்கும் இடத்தை குறிவைத்தது கிடையாது, எங்கிருந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோ, அந்த பகுதியை நோக்கிதான் பதிலடி கொடுக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
-dailythanthi.com