“எங்கள் வேலை போனாலும், ஆலையை மூடியதில் மகிழ்ச்சி”: ஸ்டெர்லைட் ஊழியர்கள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், அதன் ஊழியர்கள் தங்களுக்கு மாற்றுத் தொழில் அமைத்துத் தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை வேண்டாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தூத்துக்குடி மக்களின் தொடர் போரட்டத்தையடுத்து கடந்த மாதம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

ஆலையில் நிரந்திர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்த ஆலையை நம்பி வாழ்ந்து வருகின்றனர். தமிழக அரசின் திடீர் நடவடிக்கையால், அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதனிடையே அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியர்களை கடந்த மே 22ஆம் தேதி முதலே வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாகவும், இனிமேல் பணிக்கு வர தேவை இல்லை என ஒப்பந்த ஊழியர்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஊழியர் ரமேஷ்

ஆனால் அதில் ஊதியம் குறித்த எந்தவித தகவலும் இல்லாததால் ஊழியர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இது குறித்து ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்களிடம் பிபிசி பேசியது.

“நான் பதினைந்து ஆண்டுகளாக ஸ்டைர்லைட் ஆலையில் வேலை செய்கிறேன். இந்த திடீர் மூடல் என்பது எங்களுக்கு குடும்ப ரீதியா கஷ்டம் தான். இன்று வரை எங்களுக்கு வேலை இருக்கிறதா இல்லையா என்று தெரியாத நிலையில்தான் 3000 பேரும் இருக்கிறோம்” என்று கூறுகிறார் ஊழியர் தங்கபாண்டி.

“ஸ்டெர்லைட் ஆலையை மூடியதில் மகிழ்ச்சி”: மாற்றுவேலைக்கு ஊழியர்கள் கோரிக்கை

கடந்த மாதத்திற்கான ஊதியம் வருமா என்று தெரியாமல் இருக்கும் அவர், தன் குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணத்தை எவ்வாறு செலுத்த போகிறோம் என்ற கவலையில் உள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாகக் கூறிய அவர், “ஸ்டைர்லைட் ஆலையை மூடியது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக” தெரிவித்தார்.

“புதிதாக ஆலையை விரிவாக்கம் செய்தால், எங்கள் ஊரே காணாமல் போயிடும். கம்பெனிக்குள்ள மாஸ்க் இல்லாம இருக்க முடியாது. ஒரு அடி தோண்னாலும் ஆசீட் தண்ணீ வருது. எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாற்று வேலைக்கு வழி செய்து கொடுக்க வேண்டும்” என்றும் தங்கபாண்டி கூறினார்.

இதுகுறித்து பேசிய ஒப்பந்த ஊழியர் ரமேஷ், “ஆலையில் பணிபுரிந்ததால் தோல் நோய், ஆஸ்தும்மா போன்ற நோய்கள் வருவதாகவும் வேறு வழி இல்லாமல் அங்கு வேலை செய்து வருவதாகவும்” குறிப்பிட்டார்.

ஊழியர்கள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தூத்துக்குடி மக்களுக்கு ரொம்ப சந்தோஷம் என்கிறார் லாரி எடை மேடை ஊழியர் மணிகண்டன்.

“ஆலைக்கு தினமும் எங்க அண்ணன்தான் குடிநீர் சப்பளை செஞ்சாங்க. இப்ப தொழில் இல்லாம் கஷ்டப்படுறான். நாங்க மாற்று வழியை தான் பாக்கனும். இருந்தாலும் மக்கள பாதிக்கிற ஸ்டைர்லைட் எங்களுக்கு வேண்டாம்” என்று கூறுகிறார் ஆனந்த்.

ஸ்டெர்லைட் ஆலையில் வேலைக்கு சேர்த்து விட்ட, காண்ட்ராக்ட் நிறுவனம் சார்பில் ஒரு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதில், “மே 22ஆம் தேதியில் இருந்து எங்கள் வேலை முடிந்தது எனவும், எங்களுக்கான செட்டில்மென்ட் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் எந்த விதமான தெளிவும் இல்லை. மேலும், வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்க்கு முன்பே அறிவிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளதாக” ஒப்பந்த ஊழியர் சோமசுந்தரம் தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: