திட்டமிட்டு பாயும் தேசதுரோக வழக்குகள்.. கொதிப்பில் நாம் தமிழர் கட்சியினர்!

சென்னை : நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன. ‘ குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை முறியடித்தால், தேசத்துரோக வழக்கைப் போடுகிறார்கள்’ என கொதிப்படைந்துள்ளனராம் நாம் தமிழர் தொண்டர்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன், அக்கட்சியின் இதர நிர்வாகிகளான சாமிரவி, ராஜா, நாராயணன், அழகியநத்தம் சுரேன் உள்ளிட்டவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டத்தின் ஒருபகுதியாக பெங்களூருவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை கல்வீசித் தாக்கினர். இந்த வழக்கில் கடல்தீபன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல்; பொதுச் சொத்துகளைத் தாக்குதல் உள்பட பல்வேறு வழக்குகளில் கடல்தீபன் மீது வழக்குகள் பாய்ந்தன.

ஆட்சியருக்கு பரிந்துரை

ஏற்கெனவே, அவர் மீது சில வழக்குகள் நிலுவையில் இருந்ததால், ‘குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்’ என மாவட்ட கலெக்டர் தண்டபாணிக்குப் பரிந்துரை செய்தார் மாவட்ட எஸ்.பி விஜயகுமார். அதன் அடிப்படையில் கடல்தீபன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

உற்சாகம்

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க அறிவுரைக் கழகத்தின் முன்பு ஆஜராகி வந்தார் கடல் தீபன். இந்த வழக்கில் கடல்தீபனின் தந்தையே நேரில் ஆஜராகி வாதாடினார். கடந்த சில நாள்களுக்கு முன்புதான் கடல்தீபனின் குண்டாஸ் ரத்து செய்யப்பட்டது. இந்தத் தகவல் சீமானுக்குத் தெரிவிக்கப்பட, ‘ இப்போதுதான் தம்பி…நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

காவிரி வாரியம்

இந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள் கடல்தீபன் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய நாம் தமிழர் நிர்வாகி ஒருவர், ” நெய்வேலியில் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் வேல்முருகன் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிளர்ச்சியூட்டும் வகையிலும் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசியதாக இன்று கடல்தீபன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஆதங்கம்

அன்றைய கூட்டத்தில் பல தலைவர்கள் கலந்துகொண்டார்கள். அதில் மற்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு முதல் குற்றவாளியாக வேல்முருகனையும் இரண்டாவது குற்றவாளியாக கடல்தீபனையும் இணைத்து தேசத் துரோக வழக்கு போட்டுள்ளனர். குண்டாஸ் ரத்து செய்யப்பட்டாலும் சிறையில் இருந்து வெளியே வந்துவிடக்கூடாது என்று திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறார்கள்” என ஆதங்கப்பட்டார்.

tamil.oneindia.com

TAGS: