தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள யானைகள் அதிகப்படியான மனஅழுத்தங்களுக்கு ஆளாவதால் அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை வால்பாறை பகுதியைச் சுற்றிவரும் 69 யானைகளை ஆறுமாத காலமாக பின்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், யானைகள் விரட்டப்படும்போது, அவை பயந்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற அச்சத்தால் ஓடுவதால், கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மனிதர்களால் துரத்தப்படும் யானைகளின் சாண மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவை நாள்பட்ட மனஅழுதத்தில்(chronic stress) இருப்பது தெரியவந்ததது என்று விளக்குகிறார் பெங்களுருவைச் சேர்ந்த தேசிய அளவிலான மேம்பட்ட ஆய்வுகளுக்கான நிறுவனத்தைச்(National Institute of Advanced Studies) சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்ரீதர் விஜயகிருஷ்ணன். இந்த ஆய்வுக்காக 294 சாணமாதிரிகளை சோதித்ததாக கூறுகிறார்.
கவலைக்கிடமான பெண் யானைகள்
”போதுமான பசுந்தாவரம், உணவு இல்லாமல் போனதால்தான் யானைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படும். ஆனால், வால்பாறையில் தோட்டங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் யானைகள் விரட்டப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அப்போது உயிருக்குப் பயந்து கூட்டத்துடன் ஓடும் யானைகள் அச்ச உணர்வுடன் இருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களின்போது, குட்டி யானைகளின் மனஅழுத்தம் நூறு சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். வளர்ந்த ஆண் யானைகள் நாற்பது சதவீதம் உளைச்சலுடன் இருக்கின்றன,” என்கிறார் ஸ்ரீதர்.
பெண் யானைகளின் நிலைதான் கவலைக்கிடமான ஒன்று எனக் கூறும் அவர், ”தொடர்ந்து அச்சஉணர்வில் இருக்கும் பெண் யானைகளுக்கு இனப்பெருக்கக் காலத்தில் சுரக்க வேண்டிய பாலுணர்வு திரவம் சுரப்பதில்லை. இந்த திரவம் சுரந்த பெண் யானையைத்தான் ஆண் யானை தேடிவரும். திரவம் சுரக்காத பெண் யானைகள் இனப்பெருக்கம் செய்யமுடியாது. மேலும், நோய் தடுப்பு மண்டலம் இயங்குவதும் தடைபடும்” என்கிறார்.
”அகழிகள் அவசியம்”
யானைகளை விரட்ட பட்டாசு வெடிப்பது, பலத்த ஓசை எழுப்புவது போன்ற முறைகள் கையாளப்படுவதாக ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.
யானைகளை பட்டாசு வெடித்து விரட்டுவது மிகவும் கொடூரமான முறை என்று வாதாடுகிறார் ஓசை சுற்றுச்சுழல் அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ்.
”தோட்ட நிர்வாகம், விவசாயிகள் என பலரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக யானையை விரட்டுவது நியாயம்தான். யானைகள் பட்டாசு சத்தத்திற்கு அஞ்சி ஓடும் காட்சிகளை நேரில் கண்டுள்ளேன். கூட்டமாக வரும் யானைகள் திசைமாறிப் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. அவை அச்சத்துடன் சிதறிப்போவதை பார்க்கும்போது அதன் வலி புரியும். சில இடங்களில் யானைகளை அனுப்ப வனத்துறை அதிகாரிகளும் பட்டாசு வெடிப்பதைப் பார்த்துள்ளேன். இந்த சம்பவங்களால் யானைகளுக்கு மனிதர்கள் மீதான வெறுப்பு கூடுகிறது. இதன் விளைவாகத்தான் மனிதர்களை யானை மிதித்துகொல்லும் சம்பவங்கள் நடைபெறுகின்றன” என்கிறார் காளிதாஸ்.
யானைகள் வெளியேறும் பகுதிகளில் உள்ள நாற்பது கிராமங்களில் களஆய்வு நடத்தியதாகக் கூறும் காளிதாஸ், ”யானைகளை விரட்டுவதற்கு முன்னதாக, அவை வெளிவரும் வழிகளில் அகழிகளை அமைத்து, தொடர்ந்து அவற்றை பராமரித்து வந்தாலே, பெரும்பாலான நேரங்களில் யானைகள் மனிதர்களை நோக்கி வருவதை கட்டுப்படுத்த முடியும். அவை வந்தபின்னர் எடுக்கும் நடவடிக்கைகளைவிட, வருவதை தடுப்பது சிறந்தது.”
”பயிற்சிபெற்ற யானைகளை பயன்படுத்துகிறோம்”
வால்பாறை அடிவாரப்பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கும் சம்பவங்கள் நடப்பதாகக் கூறும் மாவட்ட வனத்துறை அதிகாரி மாரிமுத்து, ”வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் வனப்பகுதிகள் உள்ளன. இங்குள்ள யானைகளின் பாதையில் சில நேரம் தடங்கல் ஏற்பட்டால், தோட்டபகுதிகளுக்கு அவை வருகின்றன. பெரும்பாலான நேரங்களில் யானைகளை திருப்பி அனுப்ப, பயிற்சி பெற்ற மலைவாழ்மக்கள் சங்கேத மொழியில் ஓசைகளை எழுப்புவார்கள்.
இந்த சத்தத்தில் யானைகள் சென்றுவிடும். தவிர்க்க முடியாத சூழலில் முரசு கொட்டப்படும். அடிவாரப் பகுதியில் அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில சமயங்களில், பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை மலைவாழ் மக்கள் அல்லாதவர்கள் பின்பற்றி வருகின்றனர். இதனால் யானைகள் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றன என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது. வனத்துறையும் பல கட்டங்களில் முயற்சி எடுத்து வருகிறது என்பதையும் அங்கீகரிக்க வேண்டும்,” என்றார்.
மேலும் அவர், ஆண்டு முழுவதும் காட்டைவிட்டு யானைகள் வரும் சம்பவங்கள் நடப்பதில்லை என்றும் குளிர் காலத்தில் யானைகள் வரும்போது, பயிற்சி பெற்ற கும்கி யானைகளின் துணையுடன் பல யானைகளை வனப்பகுதிகளுக்கு திருப்பி அனுப்பிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளன என்றார். -BBC_Tamil