2 லட்சம் ஏக்கர் நிலமும் நனையவில்லை! – ஏழாவது ஆண்டாகத் தொடரும் துயரம்

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், 2 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ‘ காவிரி நீர் வராததால், ஏழாவது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது’ என வேதனைப்படுகின்றனர் விவசாயிகள்.

காவிரி நீர் பாய்ந்தோடும் பகுதிகளில் சாகுபடி பணிகளை மேற்கொள்ள வசதியாக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்தத் தண்ணீர் காவிரி ஆற்றின் துணை ஆறுகள் மூலமாக 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு செவிசாய்க்கவில்லை.

தமிழகத்தில் நடைபெற்ற தொடர் போராட்டங்களின் விளைவாக, மேலாண்மை வாரியம் அமைத்தது மத்திய அரசு. இதுகுறித்து முறையான அறிவிப்பு கடந்த ஜூன் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கைகள் தமிழக விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையைத் துளிர்விட வைத்தன. ஆனால், அந்த நம்பிக்கை அடுத்து வந்த நாட்களில் பொய்த்துப் போனது. மேட்டூர் அணையின் இருப்பும் வெறும் 38 அடியாக உள்ளது. இதனால் விவசாயிகளும் விவசாயக் கூலிகளும் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

நீர் இருப்பு

தமிழக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் பேசினோம். ” மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கக் கூடிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதுதான் இப்போதுள்ள ஒரே ஆறுதலாக உள்ளது. கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பின் அளவு குறித்து சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

7 ஆண்டுகள்

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் ஓரளவுக்கு உயர்ந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால், குறுவை சாகுபடியை ஓரளவுக்கு ஈடுகட்ட முடியும். காவிரி நீரைப் பெறுவதற்கான போராட்டத்திலேயே ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன.

டெல்டா மாவட்ட விவசாயிகள்

இனியும் இந்த நிலை நீடித்தால், விவசாய நிலங்களைவிட்டு ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை. குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி, மேட்டூருக்கு வந்தடைவதில் ஒவ்வொரு ஆண்டும் இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் துயரத்தில் இருக்கின்றனர்.

மழையை நம்புவதுதான் வழி

சட்டசபையில் பேசிய முதல்வரும், ‘மேட்டூர் அணையில் குறைந்த அளவு தண்ணீர் இருப்பதால் திறக்க இயலாது’ எனக் கூறிவிட்டார். மழையை நம்புவதைத் தவிர வேறு வழியில்லாத சூழலுக்கு விவசாயிகள் வந்துவிட்டனர்” என்கின்றனர் வேதனையுடன்.

tamil.oneindia.com

TAGS: