கடலிலேயே மீன் இல்லையாம்.. ஏமாற்றத்துடன் கரை திரும்பிய ராமேஸ்வர மீனவர்கள்

ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் போதிய மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்து கரை திரும்பினர்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம்தேதி முதல் ஜூன் 14ம்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்களும், பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இதனால் சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் இந்த தடைக்காலமான 60 நாட்களுக்கு கடலில் இறங்கி மீன்பிடிக்க செல்லவில்லை.

மும்முரமான ஏற்பாடுகள்

இந்நிலையில் கடந்த 14-ம் தேதி மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. அதனால் அன்று நள்ளிரவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல போகிறோம் என உற்சாகமானார்கள். ஆழ்கடலில் மீன்பிடிக்க தேவையான மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்கள், கடலில் தங்கி மீன்பிடிக்க தேவையான டீசல், மீன்களை பதப்படுத்துவதற்கு தேவையான ஐஸ் கட்டிகள் என அனைத்தையும் தங்களது படகுகளில் நிரப்பி வைத்துக் கொண்டனர்.

மீன்கள் குவியும் என எதிர்பார்ப்பு

அதேபோல மீன்பிரியர்களும் மீன்விலை உயர்த்தப்பட்டிருந்ததால், இனி தடை காலம் முடிந்து மீன்விலை குறையும் என்றும், மார்க்கெட்டுகளில் மீன்கள் குவிய போகிறது என்றும் நினைத்திருந்தனர்.

கூடுதல் மீன்கள் இல்லை

திட்டமிட்டபடியே அன்று இரவு ஆழ்கடலுக்கு ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆனால் கடலில் மீன்போக்குவரத்து குறைந்து காணப்பட்டமாக தெரிகிறது. இதனால் பல எதிர்பார்ப்புகளுடன் சென்ற மீனவர்கள் கூடுதல் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

கவலையில் மீன்பிரியர்கள்

அத்துடன் கொண்டு வந்த சொற்ப மீன்களையும் வாங்க மீன்வியாபாரிகளும் முன்வரவில்லை. இதனால் விலைவீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். மீனவர்களுடன் மீன்பிரியர்களும் சேர்ந்தே கவலையில் உள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: